ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 3

பான் இயூ தெங் (Fan Yew Teng) முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர். மிகவும் அமைதியான மனிதர். மானுட அமைதிக்கும் உரிமைக்கும் போராடிய சமூகவாதி பின்னர் அரசியலில் ஈடுபட்டு முக்கிய அரசியல் தலைவராகியிருந்தார். தனது ஐந்தாவது படிவத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்று இங்கிலாந்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகத் தொழில் செய்தார். ஆசிரியர்களுக்காகச் செயல்பட்ட தொழிற்சங்கமான National Union Of Teachers இல் தீவிரமாகப் பணியாற்றினார்.

1967இல் இந்தச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சஞ்சிகையான Educatorஇல் பிரதான ஆசிரியராக நியமிக்கப்பட்டார் பான் இயூ தெங். 1967இல் ஆசிரியர்களுக்கான வேலை பாதுகாப்பு கோரி நடத்தப்பட்ட ஆசிரியர்களின் மறியலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் பான் இயூ தெங். இவரது தீவிர முயற்சியால்தான் பெண் ஆசிரியர்களுக்கும் ஆண் ஆசிரியர்களுக்கு ஈடான ஊதியம், பணி ஓய்வு பெற்றப்பிறகு ஓய்வூதியம் என பல்வேறு சலுகைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.

பான் இயூ தெங்கின் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையை மட்டுப்படுத்த அன்றைய அரசாங்கம் இவரை கோலா லீபிஸ், தெமெர்லோ, தானா மேரா போன்ற புறநகரை ஒட்டியிருந்த பள்ளிகளுக்குப் பணி மாற்றம் செய்தது.

ஆசிரியர்கள் தங்கள் துறைக்கு அப்பாற் பட்ட வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் இவர் ஆசிரியர்களுக்கான சஞ்சியான Educatorஇல் நாடாளுமன்ற தகவல்கள் எனும் பகுதியில் எழுதிவந்தார். இதன் வழியாக ஆசிரியர்களுக்கு அன்றைய அரசியல் சூழலை அறிய வழியமைத்துக்கொடுத்தார். ஆசிரியர் தொழில் அவரது தீவிரச் செயல்பாட்டுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதை உணர்ந்து ஆசிரியர் தொழிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து டி.ஏ.பி அரசியல் கட்சி மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

1969ஆம் ஆண்டு கம்பார் நாடாளுமன்ற தொகுதியிலும் 1974 ஆம் ஆண்டு மகிழம்பூ நாடாளுமன்ற தொகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்திலும் இவர் பல்லின மக்களின் மனித உரிமை, லஞ்ச ஊழல், தொழிலாளர்களின் நலன் என பல்வேறு உரிமைக்காகக் குரல் எழுப்பி போராடினார்.

டி.ஏ.பி நடத்திய ‘ரோக்கெட்’ மாத இதழில் டாக்டர் ஓய் கி சியாக் (Dr Ooi Kee Siak) பேசிய அரசியல் சொற்பொழிவை அவர் பிரசுரித்தார். அம்மாத இதழின் பிரதான ஆசிரியராக அவர் இருந்தார். அந்த உரை மலேசிய அரசியல் அமைப்புக்கு எதிராக இருந்ததால் பான் இயூ தெங் மலேசிய தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இறுதியில் 1975 ஆம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. இதன் காரணமாக அவர் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தொடர்ந்து லண்டனில் உள்ள முன் சபைக்கு மேல் முறையீடு செய்து அதிலும் தோல்வி கண்டதால் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பியத்தை இழந்தார். இவருக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய முன்னாள் நாடாளுமன்ற ஓய்வுதியமும் மறுக்கப்பட்டது. இறுதிவரை தனது கொள்கைக்காகப் போராடியவர் தனது ஓய்வூதியத்திற்காகப் பேரரசரிடம் மேல் முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.

இவரைச் சந்தித்த ஐந்து நிமிடத்தில் பிரபஞ்சம் ஒரு சரியான ஆன்மாவை அறிமுகப்படுத்தியுள்ளதை உணர முடிந்தது. மூத்த அரசியல்தலைவர் எனும் இறுமாப்பு இல்லாமல் எளிமையாக எங்களிடம் உரையாடினார். நண்பர் பழனி எங்கள் சந்திப்பின் நோக்கத்தை முன்னமே அவரிடம் தொலைப்பேசியில் கூறியிருந்தார். நான் அவரிடம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் குறித்தும் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதி முகாம்களில் வாழும் அவலம் குறித்தும் விளக்கினேன். நிதானமாக அனைத்தையும் கேட்ட அவர், “நான் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்,” என்றார். அவர் அப்படிக் கூறியது எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

“ஏன்?” என்றேன் வியப்பாக.

“1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் குரல் கொடுத்தேன்.” என்றுக் கூறி செப்டம்பர் 15, 1983இல் சுங்கை சிப்புட்டில் அவர் ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் நகலை எங்களிடம் கொடுத்தார். அந்த உரையைப் படித்து நான் பிரமித்துப் போனேன்.

ஒரு சீனர், வேறெங்கோ உள்ள ஒரு நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும்போது நாம் ஏன் இன்னும் மௌனமாக இருக்க வேண்டுமெனத் தோன்றியது.

‘what you seek is seeking you’ நீ எதைத் தேடுகின்றாயோ அதுவும் உன்னைத் தேடுகின்றது என்ற ரூமியின் உட்கருத்தை அன்று நான் உணர்ந்திருந்தேன்.

தொடரும்

One thought on “ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 3

  1. 1983 ஆம் ஆண்டில் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த பான் இயூ தெங் , இதுவரை கேட்டிராத தகவல். நன்றி ஐயா.

    Like

Leave a comment