ஒரு புதிய தொடக்கமும்; ஓர் உருமாற்றமும் – 6

மலேசிய நண்பனில்

மனித உரிமை அத்துமீறல் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கைகளால் அவதியுறும்  தமிழ்மக்களின்  கண்டனத்தை தெரிவுபடுத்த மலேசியாவில் இயங்கி வந்த ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன் ஓர் அமைதி ஆர்பாட்டம் செய்ய எங்கள் குழு ஒரு முடிவெடுத்தது.

Fan Yew Teng ஒரு கண்டன மனுவைத் தயார் செய்து தூதரக அதிகாரியிடம் கொடுக்க முடிவெடுத்தார். நாங்கள் மலேசியாவில் அக்காலக்கட்டத்தில் தீவிரமாக மனித உரிமைக்காகப் போராடும் மற்ற மனித உரிமை அத்துமீறல்களைக் கண்டிக்கும் அரசுசாரா இயக்கங்களைத் தொடர்புக்கொள்ள முடிவு செய்தோம்.

இரண்டு வாரங்களில் மனித உரிமைக்காகப் போராடும் அரசுசாரா இயக்கங்களுடன் ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். மலாய், சீன,  அரசுசாரபற்ற இயக்கங்களுடன் Fan Yew Teng அவர்களுக்கு நெருங்கிய உறவு இருந்ததால் நாங்கள் இச்சந்திப்பை எளிதாகச் சாத்தியப்படுத்தினோம். 

9.11.1995 ஆம் ஆண்டு காலை 11 மணிக்கு ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன்பு ஓர் அமைதி போராட்டம் நடத்த திகதி குறிக்கப்பட்டது. 

மலேசிய நண்பனில்

அமைதிக்கான ஆதரவு மையத்தின் (Centre for peace Initiatives) பிரதான ஆதரவோடு கண்டன மனு மற்றும் ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன் அமைதி ஆர்பாட்டத்தை மேற்கொள்ள ஆயர்த்த பணிகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமாக நடந்தன.

மலேசிய நண்பனில்

1987 முதல் 1989 வரை  லண்டனில் நான் சட்டக்கல்வியை மேற்கொண்டபோது தென்னாப்பிரிக்க விடுதலை போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவை விடுவிக்க லண்டன் மாகாணத்தில் தெரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு இருந்தது. மூன்று முறை அந்த வீதி ஆர்பாட்டத்தில் நான் கலந்துகொண்டேன். வீதி ஆர்பாட்டத்தில் ஈடுபடும்போது மற்றவர்களின் ஆதரவை எப்படிக் கவர்வது, மற்றவர்களை எப்படி சட்டத்திற்கு உட்பட்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, அங்கு பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளிடம் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற சட்ட நெறிமுறைகளை ஓரளவு நான் தெரிந்து வைத்திருந்தேன். 

கண்டன மனு தயாரித்து முடிக்கும் தருவாயில் 39 அரசுசாரா இயக்கங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன. 

நவம்பர் 9, 1995 காலையில் நான் தூங்கி எழுந்தபோது எனக்குச் சிறு பதற்றமாகவே இருந்தது. 60,70 ஆம் ஆண்டுகளில் தோட்டப்புறத்தில் அதன் முதலாளிகளை எதிர்த்து இந்திய தொழிலாளர்கள் போராட்டங்களிலும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட்டது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் வெளிநாட்டு தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் மனித உரிமை அத்துமீறல்களுக்காகவும் மலேசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவு சாதாரண மக்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. 

தினமுரசில்

நாங்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் எங்கள் அமைதிவழி போராட்டம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். அமைதி போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதற்காக அம்பாங், செந்தூல் காவல் நிலையத்தில் தொடர்புக்கொண்டு முறையாகத் தெரிவித்திருந்தோம். இருந்தாலும் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு அனுமதியும் கிடைக்கவில்லை. வழக்கறிஞர் சிவராசா மனித உரிமை நடவடிக்கையில் அதிக ஆர்வம் கொண்டவர். கிழக்கு தீமோர் விடுதலை போராட்டதிற்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். எங்கள் போராட்டத்தினால் நாங்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் எங்களிடம் விவாதித்தார். நாங்கள் அவர் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை எங்களைப் பிரதிநிதிக்க ஏற்பாடு செய்தோம். 

1995ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா தூதரகம் ஜாலான் அம்பாங்கில் அமைந்திருந்தது. பொதுமக்கள் அனைவரையும் நாங்கள் அங்கே குழுமச் சொல்லியிருந்தோம். அந்தக் காலக்கட்டத்தில் புலனம், இன்ஸ்டா போன்ற செயலிகள் இல்லை. எனவே தொலைபேசி வாயிலாகவே அனைவரையும் நாங்கள் தொடர்புக்கொண்டோம். காலை 9 மணிக்கு Fan Yew Teng அவர்கள் என்னை அலுவலகத்தில் சந்தித்தார். நாங்கள் ஒன்றாக இணைந்து ஸ்ரீலங்கா தூதரகத்தை நோக்கிப் பயணித்தோம். நாங்கள் அங்குச் சென்றபோது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், பத்து பதினைந்து சீனர்களும் மலாய்க்காரர்களும் அங்குக் கூடியிருந்தனர். 

தி சன் நாளிதழில்

தமிழர்கள் “கொல்லாதே கொல்லாதே அப்பாவித் தமிழர்களைக் கொல்லாதே” எனக் கோஷமிட்டபடி போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். இனப்பற்று அங்கே மேலோங்கி இருந்தது.

சுமார் 50க்கும் மேற்பட்ட சிறப்பு காவல்படையினர் அங்கு கூடியிருந்தனர். அமைதி ஆர்பாட்டம் அத்துமீறிப்போனால் நடவடிக்கை எடுக்க அவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

தமிழர்களின் அவல நிலையைச் சித்தரிக்கக் கூடிய பதாகைகளை ஏந்திய வண்ணம் இளையோர்களும் முதியோர்களும் பெண்களும் கூடி கோஷமிட்டது அப்போராட்டத்தின் தன்மையை வேறொரு நிலைக்குக் கொண்டுச் சென்றது.

வாத்தான் நாளிதழில்

மூத்த காவல் அதிகாரி Fan Yew Teng அவர்களை நோக்கி யார் இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தது என்றும் அதன் நோக்கத்தையும் கேள்வி எழுப்பினார். மேலும் ஏன் காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என வினவினார். அப்போது Fan Yew Teng அவர்களும் நானும் அவர்களுக்கு எங்களுடைய காரணத்தை விளக்கினோம். உடனே அவர் தான் தூதரக அதிகாரிகளைத் தொடர்புக்கொண்டு பிறகு எங்களைச் சந்திப்பதாகக் கூறினார். 

கோலாலம்பூரின் பிரதான சாலைகளில் ஒன்று ஜாலான் அம்பாங். ஒவ்வொரு நிமிடமும் எண்ணற்ற வாகனங்கள் அந்தச் சாலையைக் கடக்கின்றன. சாலை ஓரத்தில் ஸ்ரீலங்காவில் நடக்கும் கோடூரங்களைச் சொல்லும் பதாகைகளைப் பார்த்த வாகனமோட்டிகள் தங்களின் வாகன ஹாரனை அடித்து எங்களுக்கு ஆதரவு தெரிவுத்தனர். நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் மனித அத்துமீறலை இந்நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்த பெரும் வாய்ப்பாக அமைந்தது.

மலேசியப் பத்திரிகையாளர்களைத் தவிர, பல்வேறு அனைத்துலக செய்தியாளர்களும் அங்குக் கூடியிருந்தனர். கடுமையான வெயிலில் வியர்வைத் துளிகள் சொட்ட கூடியிருந்தோர் கண்களில் நல்லது நடக்க வேண்டும் எனும் வேட்கையைக் கண்டறிய முடிந்தது.

Leave a comment