ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 4

சகோதரர் Fan Yew Teng 1995 ஆம் ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு அமைதிக்காகப் போராடும் அரசு சாரா இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அமைதி என்பது இயல்பான ஒரு நிலை. ஆனால் பதவி பட்டம் மற்றும் மதவாத தீவிரத்தால் நிலைக்குழையும் நிலங்களில் அமைதியைக் கொண்டுவர இயக்கமாகப் போராட வேண்டிய நிலையில்தான் நாம்  உள்ளோம் என்பதை அவருடன் பேசியபோது தெளிவாகத் தெரிந்தது.

அவர் Centre for Peace Initiative (Cenpeace) எனும் அமைதிக்கான முன்னெடுப்பு மையத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்த மையம் அமைதிக்காகப் போராடும் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஆகியோரைக் கொண்டு பெரிய விளம்பரம் இல்லாமல் பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வந்தது.

ஈழப்போராட்டத்திற்கும்  பல்லினம் கலந்த ஒரு தோற்றத்தைக் கொடுக்க வேண்டும் எனும் எங்கள் சிந்தனைக்கு அவர்  ஆதரவாக இருந்தார். Cenpeace அமைப்பு மூலமாக ஈழத்தில் நடக்கும் இன அழிப்பை மலேசியாவுக்கும் உலக கண்டனத்திற்கும் கொண்டுவர முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 

அவருடன் நாங்கள் செலவிட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஈழ இனப்படுகொலைகளுக்கு எதிரான குரலை மலேசிய அரசியலமைப்புக்கு உட்பட்டு  கொடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

நாங்கள் எங்கள் செயலைத் தொடர்வதில் தீவிரமாக இருந்தோம். அது புதிய பாதைகளை எங்களுக்குத் திறந்துவிட்டது. முற்போக்குச் சிந்தனை, யாழ்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழர்களைச் சந்தித்து பேசி அவர்களின்  ஆதரவையும் பெறலாம் எனப் பழனி கூறினார். 

அப்போதுதான் யாழ் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு.தில்லைநாதன் மற்றும் அவர் நண்பர் விக்னேஸ்வரன் அவர்களை பிரிக்ஸ்பில்டில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். 

தில்லைநாதன் பெரிய உருவ அமைப்பைக் கொண்டவர். முன்னாள் அரசு ஊழியர். மிகவும் நேர்மையாகப் பேசக்கூடியவர். ஈழத்தில் நடக்கும் போரினால் பாதிக்கப்படும் மக்களை மீட்க வேண்டும் என்ற சீரிய சிந்தனை கொண்டிருந்தார். அவரிடமிருந்து எங்களுக்கு நேர்மறையான பதில் வந்தது. இதுபோன்ற அம்சங்கள் எங்களை இடைவிடாமல் இயக்கியது. 

ஈழத்தில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த தோழர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்தோம். வேலை முடிந்து மாலை 5 மணிக்குத் தொடங்கும் எங்கள் சந்திப்பு சில சமயம் அதிகாலை இரண்டு மணிவரை கூட தொடரும். நூற்றுக்கணக்கான அனுதாபிகளையும் ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசியுள்ளோம். மலேசிய சட்டத்திற்குட்பட்ட குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என எண்ணி மூத்த வழக்கறிஞர்களான தேவசிகாமணி (காமணி என அவரை அழைப்பர்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசா போன்றோரை  சந்தித்தோம். வழக்கறிஞர் காமணி இடதுசாரி சிந்தனை கொண்டவர். தொழிற்சங்க வழக்குகள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கான வழக்குகள் போன்றவற்றை நடத்தியவர். இவரது அலுவலகத்தில்தான் வழக்கறிஞர் சிவராசா பணியாற்றினார். இவர்களது ஒத்துழைப்பால் எங்கள் சிந்தனை மேலும் கூர்மை அடைந்தது.

இறுதியில் அக்டோபர் 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழர் நிவாரண நிதி எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய உறுப்பினர்களாக தில்லைநாதன், கந்தா, பழனி, சிவராசா மற்றும் நான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நண்பர் ராஜூ நிர்வாகச் செயலாளராக அமர்த்தப்பட்டார். Fan Yew Teng எங்கள் இயக்கத்திற்கு ஆலோசகராகச் செயல்பட இசைந்தார்.

இயக்கம் தொடங்கப்பட்டாலும் எங்கள் முன் வேறொரு சவால் இருந்தது. 

80,90 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை ஒரு உள்நாட்டு கலவரம், அல்லது இரு இனங்களுக்கு இடையிலான நடக்கும் சண்டை என குறுகிய பார்வையில்தான் பலரது கண்ணோட்டம் இருந்தது. தமிழீழத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், மொழி, பூர்வீகம், தொன்மை, அனைத்துலகச் சட்டத்தின் படி அவர்களுக்குத் தனிநாடு கோரக்கூடிய உரிமை உள்ளது என்பதை 80% தென்னிந்திய வம்சாளியில் வந்த மலேசியத் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒரு காலக்கட்டத்தில் நானும் அத்தகைய சிந்தனையில்தான் இருந்தேன் எனலாம்.

அதோடு 1930 முதல் 1970 வரை மலேசியாவில் உள்ள தோட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் யாழ்பாண தமிழர்கள். தங்களைக் கறுப்பு துரை என்றே குறிப்பிடும் அளவுக்கு தோட்ட நிர்வாகத்தில் அவர்களின் செல்வாக்கு இருந்தது. அவர்கள் கல்வி கற்காத தென்னிந்திய தமிழர்களை அவமதித்ததையும் கீழ்மையாக நடத்தியதையும் பலரும் அறிந்திருந்தனர். அதில் பாதிக்கப்பட்ட பலர் எங்கள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் ஈழ சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

தென்னிந்தியத் தமிழர்களின் வம்சாவளியில் வந்த பெரும்பான்மை மலேசியத் தமிழர்களிடம் ஆதரவு திரட்டுவது சிரமமாகவே இருந்தது. அப்போதுதான் ஐயா யோகரத்தினத்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தில்லைநாதன் மூலமாக  அவரைச் சந்தித்தேன். மலேசிய வெளியுறவு பிரிவில் மூத்த அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் அவர். எளிமையான தோற்றம் கொண்டவர். அவரும் அவரது நண்பர்களும் தங்களால் இயன்ற அளவு தமிழீழத்தில் அவதியுறும் மக்களுக்கு பணம் மற்றும் பொருளுதவியைச் செய்து வந்ததை அவர் என்னிடம் கூறினார். 

அவரை நான் அம்பாங் எல்.ஆர்.டி நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சந்தித்தேன். முதலில் என்னைத் தனியாகச் சந்திப்பதைத் தவிர்த்தவர் தில்லைநாதன் ஆலோசனைக்குப் பிறகு சம்மதித்தார்.

தனது அரசு பணியின் பின்னணியைப் பேசாமல் ஈழ மக்களுக்கு உதவும் வழிவகைகள் குறித்து மட்டும் உரையாடினார். 1983 ஆண்டு கறுப்பு ஜூலை கொடுமை நடந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தென்னிந்திய தமிழர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வந்ததை எண்ணி நன்றி கூறினார். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் எனும் அடையாளத்தின் கீழ் நாம் அனைவரும் ஓரினமே எனும் கருத்தில் நம்பிக்கை வைத்து பேசினார். உணர்ச்சி மேலிட பேசிய அவர் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதைக் கண்டேன். அது தாய்நாட்டின் மீதுள்ள அன்பு.

யோகரத்தினம் ஐயா, Fan Yew Teng ஆகியோரிடம் கிடைத்த ஆதரவின் வழியாக எங்களின் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

  • தொடரும்

Leave a comment