ஒரு புதிய தொடக்கமும்; ஓர் உருமாற்றமும் – 7

80,90 ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரிக்காத அமெரிக்கா, இந்தியா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்  அப்போராட்டத்தை உள்நாட்டு கலவரம் என்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் சித்தரிக்கத் தொடங்கின. 

வங்காளதேசம் எனும் தனிநாட்டை உருவாக்கத் முன்னோடியாக இருந்த இந்தியா, மே 21, 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு எதிரான அகில உலக அரசியலில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியது. இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த காலக்கட்டத்தில் ஈழ விடுதலை சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கியதற்கான அரசு சான்றுகள் நிறையவே உள்ளன. 

மலேசிய உலகத்தமிழர் நிவாரண நிதியை ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே. அதே சமயத்தில் தமிழீல விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைபாடு, தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துகளை முன்வைப்பதும் நோக்கமாக இருந்தது. 

மலேசிய அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு அனைத்துலக பார்வையை ஈர்க்க சகோதரர் Fan Yew Teng ஜனநாயக ரீதியில், மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு நிறையவே ஆலோசனை வழங்கினார். 

இந்திய அரசியல் வட்டத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில் நிற்பதால் தமிழீல மக்களின் இன்னல்களை மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரங்களைக் கண்டித்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போதைய இந்திய அதிபர் மாண்புமிகு சங்கர் தயாள் சர்மாவிடம் ஆட்சேபத்தை மலேசியாவில் இருக்கும் இந்தியத் தூதரகம் வழங்க முடிவெடுத்தோம். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐக்கிய நாட்டு சபை அமைக்கப்பட்டதின் நோக்கம் உலக அமைதியை உறுதிப்படுத்துவதும் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு மனித உரிமை அடிப்படையிலான போராட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பதாகும். அவ்வகையில் மலேசியாவில் இயங்கும் ஐக்கிய நாட்டுச் சபை பிரதிநிதியிடம் ஆட்சேப முடிவை வழங்க முடிவெடுத்தோம். 

நவம்பர் 30, 1995 ஆம் ஆண்டு வியாழன் காலை 10 மணிக்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட மலேசியத்தமிழர்களோடு பிற இனத்தவர்களும் சேர்ந்து டமான்சரா ஹைட்ஸில்  அமைந்துள்ள ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்தின் முன் ஒன்று கூடி எங்கள் மனுவைச் சமர்ப்பித்தோம்.

43 அரசு சார்பற்ற  இயக்கங்கள் எங்களின் ஆட்சேபத்தை ஆதரித்து தங்கள் அங்கீகாரத்தை வழங்கின. சகோதரர் Fan Yew Teng எங்களின் ஆட்சேப மனுவைத் தயாரித்திருந்தார். 

மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகள் நாங்கள் எதிர்ப்பார்த்ததற்கு மேலாக தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன. எங்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள், ஐக்கிய நாட்டுச்சபை பிரதிநிதி  திரு. மெய்ல் பூனிடம் மனுவை வழங்கினோம்.

26.1.1996 (வெள்ளிக்கிழமை)  ஜாலான் தாமான் டூத்தாவில் அமைந்திருந்த இந்தியத் தூதரகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி ஸ்ரீலங்காவின் செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய அரசின் நிலைபாட்டைக் கண்டிக்கும் மனுவைச் சமர்பித்தோம். எங்களின் ஆட்சேப மனுவில் இரண்டு விடயங்கள் இருந்தன.

முதலாவது, தமிழக மக்கள் நன்கொடை வழங்கி ஈழ மக்களுக்கு அனுப்பி வைத்த 45 லட்சம் ரூபாயை இந்திய அரசு முடக்கி வைத்தது. மேலும் இந்திய மத்திய அரசு 130 கோடி கடன் உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்குவதைக் கண்டிப்பதாக அமைந்தது. 

16.2.1996இல் இரண்டாவது முறையாக இந்தியத் தூதரகத்தின் முன் மீண்டும் ஒரு எதிர்ப்பு மனுவை இந்திய தூதரகத்திடம் நாங்கள் வழங்கினோம். 

90களில் வேறொரு நாட்டு மக்களுக்காக வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது மலேசியாவைப் பொறுத்தவரை ஓர் அபூர்வமான நிகழ்வு. வீதி போராட்டமும் ஆட்சேப மனு வழங்குவது ஜனநாயக மரபுக்குப் புறம்பானதல்ல. ஆனாலும் மகாதீர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் காவல் துறையில் நெருக்குதல்கள் அதிகமே இருந்தன. அந்த அச்சுறுத்தும் சூழலிலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த அரசு சார்பற்ற இயக்கங்களுக்கும் தொழிற்சங்கவாதி Fan Yew Teng அவர்களுக்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

Leave a comment