ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 5

எங்களின் முதல் திட்டம் தமிழீழம் குறித்த தவறான செய்திகளையும் அதனால் உருவாகும் எண்ணங்களையும் அகற்றுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக  தமிழீழ தனிநாடு கோரிக்கைக்குச் சரித்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மலேசியர்களுக்குத் தெளிவை அளிப்பது. மூன்றாவதாக, தமிழீழ போராட்டத்திற்கு மலேசிய அரசு தரப்பில் ஆதரவைப் பெறுவது. அதே சமயம் மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளைச் சந்தித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வன்முறை தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடூரங்களை விளக்குவது எனும் முடிவுக்கு வந்தோம்.

ஐயா யோக ரத்தினம் யாழ்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி. பதிவு பெற்ற அரசாங்க உயர் அதிகாரி. அவரிடம் நான்  தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை அத்துமீறல் மற்றும் அவர்களது தனிநாடு கோரிக்கைகள் பற்றி சட்ட ரீதியிலான உரிமைகளை சட்ட ஆவணங்களின் சான்றுகளுடன் ஒரு சிறிய கையேட்டை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னேன். அப்போது அவரது கண்களில் ஏற்பட்ட நம்பிக்கை என்னையும் உற்சாகப்படுத்தியது. அவர், “எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு. எளிமையான முறையில் நான் அந்தக் கையேட்டைத் தயாரித்துக் கொடுக்கிறேன்” என்றார். 

1993இல் என் நண்பர்களான மணியம், வழக்கறிஞர் ஆறுமுகம், கணபதி கணேசன் ஆகியோர் சேர்ந்து செம்பருத்தி என்ற மாத இதழை ஆரம்பித்து நடத்தி வந்தோம். அந்த மாத இதழின் அடிப்படை கோட்பாடு என்னவென்றால் ‘உனது உரிமையைப் இழக்காதே; பிறருரிமையை பறிக்காதே’.

செம்பருத்தி மாத இதழ் வழியாக மலேசியத் தமிழர்கள் இடையே தமிழீழ மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகப் படும் துன்பங்களை பற்றி விளக்கினோம். மேலும் சட்ட ரீதியிலான அவர்கள் உரிமைகளை மக்கள் மத்தியில் முன்வைப்பதையும் ஒரு கடப்பாடாக எடுத்துக்கொண்டோம். ஒவ்வொரு மாதமும் 25,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட செம்பருத்தி நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. 

90ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிய குழுக்களில் செம்பருத்தியும் ஒன்று. 

தினசரிகளில் தமிழீழம் குறித்து சரியான செய்திகள் பிரசுரமாவது அவசியம் எனக் கருதினோம். அதன் அடிப்படையில் நண்பர் பழனி சிலாங்கூர் கிளப்பில் முதன்மை தமிழ் செய்தியாளர்களுடனான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அதில் மலேசிய நண்பன் இயக்குனர் ஆதி. குமணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆதி. குமணனே இக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்றார். 

கலந்துகொண்ட அனைவரும் தமிழீழம், அகதிகள், விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளைப் பத்திரிகை நியதிகளுக்கு உட்பட்டு ஒரு தார்மீக பொறுப்புடன் வெளியிட சம்மதித்தனர். 

நவம்பர் 1995 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஐயா யோக ரத்தினம், எழுதிய Why Tamil Eelem (தமிழீழம் ஏன்?) என்ற ஆங்கில கையேட்டை என்னிடம் கொடுத்தார். அந்த கையேட்டை ஒரு மணி நேரத்தில் நான் படித்து முடித்தேன். சாதாரண மக்கள் படித்துத் தெரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு எளிமையான மொழியில் எழுதப்பட்டிருந்தது. சரித்திரமும் சட்ட சான்றுகளும் அதில் வழுவாக இடம்பெற்றிருந்தன. 

நாங்கள் கொடுத்த பணியை தனது 70 வயதில் ஒரே வாரத்தில் செய்து முடித்த அவரின் ஈடுபாடு தனது தாய்நாட்டின் மீதான அன்பையும் பற்றையும் பறைச்சாற்றியது.

செம்பருத்தி இதழை அச்சடித்துக் கொடுத்த நண்பர் நாதனைத் தொடர்புக் கொண்டு Why Tamil Eelem ஆங்கில கையேட்டை 50,000 பிரதிகள் அச்சடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

தமிழீல பிரச்சாரத்தை மலேசிய நண்பன், தமிழ் நேசன், தினமுரசு, செம்பருத்தி வாயிலாகவும் ஆங்கிலம் மட்டுமே வாசிக்கத் தெரிந்த இந்தியர்கள் மத்தியில் Why Tamil Eelem எனும் கையேடு வாயிலாகவும் எங்கள் பிரச்சாரத்தைக் கொண்டுச் சென்றோம். 

அரசியல் கட்சிகளான ம.இ.கா, டி.ஏ.பி, பாஸ் போன்றவர்களை தோழர் Fan Yew Teng மூலம் அணுகி விளக்கத்தைக் கொடுத்ததோடு அவர்களின் ஆதரவையும் நாடினோம். 

மலாய் பத்திரிகைகளான ஹராக்கா போன்றவற்றை சந்திக்க Fan Yew Teng எங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தார். 

நவம்பர், டிசம்பர் 1999 இல் மட்டுமே நாங்கள் ஐந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினோம். எங்கள் முக்கியக் குறிக்கோள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துன்பத்தை சாமானிய மக்களுக்குக் கொண்டுச் செல்வதும் அவர்களிடையே இப்போராட்டத்தை பேசுபொருளாக மாற்றுவதாகவே இருந்தது. 

அந்நியப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் மற்றும் பிறப்புரிமை பரிக்கப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை மத்திய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்து, அவர்களுக்குச் சட்ட ரீதியாக உதவ வேண்டும் என்ற எங்களின் உன்னத எண்ணம் புதிய பரிணாமம் எடுப்பதை எங்களால் உணர முடிந்தது.

One thought on “ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 5

  1. இலங்கையில் ஒரு சக மனிதனுக்கு நிகழ்ந்த அந்நியாயங்களை நினைத்தால் இன்றளவும் கவலையும் ஆதங்கமும் மட்டுமே நிலைத்திருக்கின்றது. கவலைப்பட்டோ அல்லது ஆதங்கம்பட்டோ அந்த நிகழ்வுகளைக் கடத்திவிடாமல் சட்ட ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

    Like

Leave a comment