ஒளிர்நிழல் 50 சிந்தனையை மாற்றிய ஒரு நூல் (பகுதி 2)

நோர்மன் வின்சென்ட் பீல்

கடந்த தொடரில் புள்ளிகள் பெறுவதில் உள்ள சிக்கலைச் சொல்லியிருந்தேன் அல்லவா? 

அதாவது, பல்கலைக்கழகத்தின் ஒரு தவணையில்  30 கிரெடிட் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கூடியபட்சம் 34 கிரெடிட் பெறத்தக்க பாடங்களைத்தான் எடுக்க முடியும். நான் மூன்றாம் ஆண்டில் செய்த தவற்றினால் நான்காம் ஆண்டில் 39 மதிப்பெண்கள் கொண்ட பாடத்தை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அது பல்கலைக்கழக பாட கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. நான் கூடுதலாக 5 கிரெடிட் மதிப்பெண்களைப் பெற பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி தேவை. 

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இருந்தபோதுதான் நேர்மறை சிந்தனையின் அதீத ஆற்றல்  (The power of positif thinking) என்ற அந்த நூலை நான் கண்டடைந்தேன். உண்மையில் நான் அந்நூலைத் தேடி கண்டடைந்தேனா அல்லது என் சூழலை அறிந்து அந்நூல் என்னிடம் வந்து சேர்ந்ததா என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்றும் நான் பலருக்கும் பரிந்துரைக்கும் நூல் அது. 

Read More »

ஒளிர்நிழல் 49: சிந்தனையை மாற்றிய ஒரு நூல்

பொங்கல் விழா முடிந்தது. விரிவுரைகள், பிரத்தியேக வகுப்புகள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்புகள் என கல்விச்சூழல் வழக்கமான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. 

இறுதி ஆண்டு அது. எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் பெற முடியும். அப்படி இல்லாவிட்டால் மீண்டும் ஒருவருடம் படிப்பைத் தொடர்ந்து பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். நான்காண்டு பட்டப்படிப்பு ஐந்தாண்டாகிவிடும். 

நான் ஒரு பட்டம் பெற்ற பொரியியலாளனாக வரவேண்டும் என்பதே என் அம்மாவின் ஆசை. பத்து ஆராங்கில் நாங்கள் வாழ்ந்த சிரமமான சூழல் அவரை அப்படி சிந்திக்க வைத்தது. 

பத்து ஆராங் ஒரு நிலக்கரி சுரங்க கிராமம். 1930களில் சுமார் 25000 மக்கள் தொகையை அந்த ஊர் கொண்டிருந்தது. அதில் பெரும்பாலோர் அந்த நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது செயல்பட்ட மலாயா ரயில் சேவைக்குத் தேவையான 100%  நிலக்கரி பத்து ஆராங்கில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டது. பூமியில் 100 அடிகளுக்கும் அதிகமாக சுரங்கம் தோண்டப்பட்டு நிலக்கரி தோண்டப்பட்டன. அப்படி பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்ட சுரங்கங்கள் பல எலிவலைகளை ஒன்றிணைத்ததைப் போல இருக்கும் என என் அப்பா அடிக்கடி கூறுவார். 

Read More »

ஒளிர்நிழல் 48: பொங்கல் போதித்த புதிய பாடம்

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழிந்த பின்னர் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவே அப்பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய கலாச்சார நிகழ்ச்சி. எனவே இந்த விழாவுக்கு மாணவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. 

நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் மாணவர்கள் கூடத் தொடங்கினர். அதற்கு முன்னர் காலையிலேயே ஏற்பாடுகள் தடபுடலாகத் தொடங்கின. வாழைமரமும் தென்னந்தோரணமும் கட்டப்பட்டு கல்லூரி வளாகம் புத்துணர்ச்சியுடன் காட்சியளித்தது. வண்ணக்கோலங்களும் அலங்காரங்களும் அந்நாள் இந்திய கலாச்சார தினத்திற்கானது என அறிவிப்புகளைச் செய்தன. அதுவரை நான் பார்த்த சக தோழர்கள் பண்பாட்டு உடைகளுடனும் சிலர் நவீன உடைகளுடனும் வலம் வந்தனர். பழகியவர்கள் பலரும் எனக்கு புதிய முகங்களாகத் தெரிந்தன. எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி; உற்சாகம். மெல்ல மெல்ல அவ்விடன் ஒரு தோட்டப்புற திருவிழா குதூகலத்தை ஏற்பதை நான் ரசிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையே பாங்கி, காஜாங் நகரங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அரங்கில் கூடத் தொடங்கினர். பல்கலைக்கழக வளாகம் அவர்களுக்கு அந்நியமாக இருப்பது அவர்களின் உடல்மொழியில் தெரிந்தது. என் குழுவினர் அவர்களின் தயக்கங்களை உரையாடுவதன் மூலம் போக்கினர். பிற பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் பல்கலைக்கழக மாணவிகளிடம் பேசிப்பழக அச்சூழலை ஒரு வாய்ப்பாகப் பயப்படுத்திக்கொண்டனர். தத்தம் வாழ்வுக்குத் துணை தேடும் பரவசத்தை அங்கே காண முடிந்தது. அத்தனை மனங்களின் உற்சாக அதிர்வலைகள் அவ்வரங்கத்தை நிறைத்திருப்பதை அரூபமாக உணர்ந்தேன். ஒரு விழா சமூகம் ஒன்று திரளவும் பல்வேறு நல்வாய்ப்புகள் அமையவும் எப்படியெல்லாம் காரணமாக இருக்கிறது எனப் புரிந்தது.

Read More »

ஒளிர் நிழல் 47: தன்னைத் தான் அறிதல்

நினைவு மலர் முகப்பு

தேசியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பகுதியில் இருந்த மாணவர் நல இலாக்காவில் இருந்து எங்களுக்குப் பொங்கல் விழாவினை நடத்த அனுமதி கடிதம் கிடைத்தது. மத அடிப்படையிலான சில கட்டுப்பாடுகளைத் தவிர பண்பாடுகளை முன்னெடுக்க எவ்வித தடையும் இல்லாமல்  அனுமதிக்கப்பட்டிருந்தோம். 

கல்லூரியில் இருந்து எங்களுக்கு எவ்வித பண உதவியும் கிடைக்கவில்லை. எங்கள் கணிப்பின்படி பொங்கல் விழாவை நடத்த 5000 ரிங்கிட் தேவையாக இருந்தது. ஆனாலும் தேசியப் பல்கலைக்கழகத்தின் முதல் பொங்கல் விழா ஏற்பாடு உற்சாகமாகத் தொடங்கியது.

தொடக்கத்தில் சில வாரங்கள் சக மாணவர்களுக்கு எங்களின் மேல் அதிக நம்பிக்கை இல்லை. தொடர்ந்து வந்த காலங்களில் எங்கள் முன்னெடுப்பைப் பார்த்த நண்பர்கள் எங்களுடன் இணைந்து  இப்பணிக்காக உழைத்தனர். 

பிற பல்கலைக்கழக மாணவர்கள் வந்தால்தான் எங்கள் நிகழ்ச்சி வெற்றியடையும் எனக் கருதியதால் பிற பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாகவே நுழைவு சீட்டை வழங்கினோம். காஜாங், பாங்கி, கோலாலம்பூர் வட்டாரத்தில் இருந்த பொதுமக்களிடையே முன்னூறு நுழைவு சீட்டுகளை சுமார் மூன்று ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யும் பொறுப்பாளர்களை மாணவர்கள் மத்தியில் இருந்தே நியமித்தோம். 

Read More »

ஒளிர் நிழல் 46: தேசியப் பல்கலைக்கழக பொங்கல் – ஒரு தொடக்கம்

கல்லூரி காலத்தில் சி. பசுபதி

1960 – 70 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி கனவு ஐந்து பல்கலைக்கழகங்களையே சார்ந்து இருந்தது. இந்த ஐந்து பல்கலைக்கழகங்களின்  பின்புலத்தை ஓரளவு அறிந்துகொள்வது அவசியம். 

முதலாவதாக 1940களில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட மலாயா பல்கலைக்கழகத்தின் கிளை கோலாலம்பூரில் உருவாகி பின்னர் 1962இல் முழுமையான பல்கலைக்கழகமாகத் தோற்றம் கண்டது. இதனை அடுத்து மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 1969இல் தோற்றம் கண்டது. தொடர்ந்து 1970இல் தேசிய பல்கலைக்கழகம் செயல்படத்தொடங்கியது. இன்று புத்ரா பல்கலைக்கழகம் என அழைக்கப்படும்  UPM 1971 இல் விவசாயத்தை பல்கலைக்கழகமாக உருபெற்றது. மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 1972இல் உருவானது. 

இன்று இருபது அரசு பல்கலைக்கழகங்களுக்கு மேல் மலேசியாவில் இருந்தாலும் தொடக்கத்தில் இந்த ஐந்து பல்கலைக்கழகங்களே மேற்கல்விக்கான வாய்ப்புகளை வழங்கின. 

ஒரு இனத்தின் வளர்ச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டும் கணிக்கப்படும் சூழலில் 1969 இல் மலேசியாவில் நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு மலாய்க்கார மாணவர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகங்களில் அதிகரிக்கும் நோக்கில்தான் நான் பயின்ற தேசிய பல்கலைக்கழகம் உதயமானது. 

Read More »

ஒளிர் நிழல் 45: பற்களும் ஆளுமையும்

நம்மில் சிலர் பிறக்கும்போதே சில உடல் குறைகளுடன் பிறப்பதுண்டு. அதன் விளைவாக நமது மன வளர்ச்சியிலும் தாக்கங்கள் நிகழும். காலமும் தேவையுமே அதன் வீரியத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது. 

நான் ஆரம்ப, இடைநிலைப்பள்ளி வாழ்க்கையில் மெலிந்த உடலைக் கொண்டிருந்தேன். இது எனக்கு பெரும் குறையாக இருந்தது. வலுவற்ற உடலைக் கொண்டிருந்ததால் பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகளில் முதன்மையான மாணவனாகத் திகழ முடிந்ததில்லை. இந்தக் குறையை போக்க  ஆசிரியர்களுக்கு உதவுவதை நான் என் கடமையாகக் கொண்டேன். பாடத்துக்கு வெளியில் செய்யும் நடவடிக்கை என நானாக அதை வடிவமைத்துக்கொண்டேன். எனது விருப்பமான ஆசிரியர்களான திரு பன்னீர் செல்வம் மற்றும் கோவிந் ஆகியோருக்கு அவ்வப்போது தேநீர் வாங்கி வருவது மதிய உணவு வாங்கி வருவது. விடுமுறை காலங்களில் அவர்கள் வீடுகள், வாகனங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்துக்கொடுத்தேன். 

Read More »

ஒளிர்நிழல் 43: எஞ்சி இருக்கும் தடயங்கள் 

விவேகானந்தர் ஆசிரம முன் தோற்றம்

1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை மேற்கல்வியைத் தொடர  கோலாலம்பூருக்கு வரும் மாணவர்கள் தங்கி பயில இரண்டு மாணவர்களுக்கான  விடுதிகள்தான் இருந்தன. முதலாவது, பெட்டாலிங் ஜெயாவில் இயங்கி வந்த பி.பி.என் விடுதி. இரண்டாவது பிரிக்ஸ் பில்டில் இயங்கி வந்த விவேகானந்தர் விடுதி. 

பெட்டாலிங் ஜெயாவில் இயங்கி வந்த விடுதியை நிர்வகித்தவர்கள் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினர். அப்போது அதன் தலைவர் பி.பி.நாராயணன். அதன் நிர்வாகச் செயலாளராக நவமுகுந்தன் இயங்கினார். ரப்பர், செம்பனை தோட்டத் தொழிலாளர் நலனுக்காக இந்தச் சங்கம் இயங்கி வந்தது. ஆனால் அவர்கள் தோட்டத்தொழிலாளர்கள் நலனுக்காக தீவிரமாக உழைக்கவில்லை என்ற விமர்சனத்தின் மீது எனக்கு உடன்பாடு உண்டு. சுதந்திரத்துக்குப் பின்பான தோட்டத்துண்டாடலில் பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளிகள், பெருநகருங்களுக்குப் புலம்பெயர்ந்து கைவிடப்பட்டவர்களாகவும் வாழ்வாதாரத்திற்கு தினசரி கூலிகளுமாகவும் உருவாகிய கருப்பு வரலாற்றுக்குப் பின்னால் இந்த இயக்கத்தின் சுயநலப்போக்குக்கும் பங்குண்டு. 

பி.பி.என் தங்கும் விடுதி அனைத்துலக நிறுவனங்களின் ஆதரவினால் சிறப்பாகவே செயல்பட்டது. பல மாணவர்கள் இதனால் நன்மை அடைந்தனர். ஆனால், எண்பதாம் ஆண்டுகளில் இவ்வியக்கத்தின் நோக்கம் திசை மாறியது. தோட்டத்தொழிளாலர்களின் நன்மைக்கு பாடுபடுவதை விடுத்து இவ்வியக்கத்தின் தலைமைத்துவமும் முதலாளிகளாக மாற முனைப்பு காட்டியது. கெட்கோ, கரும்பு ஆலை,  லட்சுமி நெசவாலை, தோட்டங்கள் வாங்குவதற்கான முதலீடு போன்ற காரணங்களுக்காக சந்தா பணத்தை உபயோகித்ததோடு வங்கியிலும் கடன் வாங்கினர். ஆனால் எந்த வியாபாரமும் வெற்றிகரமாக நடைபெறவில்லை. அனைத்தும் நட்டமடைந்து தோட்டங்கள் உள்ளிட்ட சங்கத்தின்  சொத்துகள் சிலவற்றை விற்க வேண்டியதானது. அப்படித்தான் பி.பி.என் விடுதி அமைந்துள்ள நிலத்தை விற்கப்பட முடிவானது. 

அந்த விடுதியில் தங்கி பயின்று பட்டதாரியாகி தங்கள் வாழ்வை வளமாக அமைத்துக்கொண்ட யாரும் இதை எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு சாதாரண தோட்டப்பாட்டாளி பி.பி.நாராயணனின் இச்செயலை எதிர்த்தார். அவர் அர்ஜுனன். 

1991ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சராக இருந்த லிம் ஆ லேக்கிடம் (Lim Ah Lek) ஒரு மகஜரை சமர்ப்பித்தார். ஆனால் அவர் முயற்சி வெற்றியடையவில்லை. பின்னர் இந்நிலம் சீன முதலாளிக்கு விற்கப்பட்டது. இப்போது பெட்டாலிங் ஜெயாவில் இஸ்தாரா கொண்டோமினியம் எனும் ஆடம்பட அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்தில்தான் அந்த விடுதி வீற்றிருந்தது. ஏழை இந்திய மாணவர்களுக்கு மலிவான தங்கும் வசதியைக் கொடுத்ததோடு ஏழை இந்தியர்களின் அடையாளமாக இருந்த ஓர் நிலம் முற்றிலும் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. அன்றைய ம.இ.கா தலைவர்களிடமும் மௌனம் மட்டுமே நிலவியது. 

பி.பி.என் விடுதிக்கு அடுத்து துடிப்புடன் இயங்கியது கோலாலம்பூரில் அமைந்துள்ள விவேகாந்தர் ஆசிரமம். ஆன்மிகம் சார்ந்த மண்டபத்துடன் இருந்த இந்த ஆசிரமம் பெட்டாலிங்ஜெயா விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி, விவேகானந்தர் இடைநிலைப்பள்ளி, செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை நடத்தி வருகிறது. 

இதைத் தவிர மாணவர்கள் தங்கி பயில்வதற்காக அந்த ஆசிரமத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு முக்கியமானது. மாதம் பத்து முதல் இருபது ரிங்கிட் வரையே குறைவான கட்டணத்தில் அடிப்படை வசதிகளுடன் அந்த விடுதி மாணவர்களுக்காக வழங்கப்பட்டது. 

உண்மையில் விவேகானந்தர் ஆசிரமம் 1904 ஆம் ஆண்டு யாழ்பாண தமிழர்களாலும் தென்னிந்திய தமிழர்களாலும் தங்கள் மாலை நேரங்களில் வாசித்து பொழுதை கழிக்க உருவாக்கப்பட்ட இடமே பின்னாலில் விவேகானந்தர் ஆசிரமம் என மாறியது. 

விவேகானந்தர் மாணவர் விடுதி

1977-78 களில் ராம சுப்பையா உபகாரச்சம்பளம் படிவம் ஆறு மாணவர்களுக்காக இலவச கல்வியை வழங்கியது. அதில் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆறாம் படிவம் முடிவடைந்ததும் பலரும் ஊர் புறப்பட்ட நிலையில் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்ந்ததால் நான் அங்கேயே தங்குவது தொடர்ந்தது. பல்கலைக்கழக முதல் இரண்டு ஆண்டுகள் அங்குதான் தங்கினேன். அப்போது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. 

அன்றெல்லாம் பிரிக்ஸ் பில்டில் அதிகாலை இரண்டு மணிவரை அங்காடி கடைகள் திறந்திருந்திருக்கும். நான் களைப்பாக இருந்தால் அங்காடி கடைகளில் தேநீர் அருந்துவது வழக்கம். அப்படி ஒருநாள் பாடங்களை மீள்பார்வை செய்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறியபோது இரண்டு மலாய்க்கார இளைஞர்கள் என்னை வழி மறித்து ‘நில்’ என்றனர். அவர்கள் தோற்றம் போதைப்பித்தர்கள் போல இருந்ததால் நான் ஓட ஆரம்பித்தேன். என்னிடம் உள்ள பணம் பறிபோகும் எனும் அச்சமே என்னைச் சூழ்ந்தது. நூறு மீட்டர் ஓடியவுடன் அங்கிருந்த விஜி பர்கர் கடையின் அருகில் நின்றேன். அக்கடை இன்னும் உள்ளது. 

விஜி பர்கர் கடை

எனக்கு மூச்சு வாங்கியது. பர்கர் கடை விஜி நான் ஓடி வந்த காரணம் கேட்கவும் என் பின்னால் அந்த மலாய்க்காரர்கள் இருவர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர்கள் நான் ஓடி வந்த காரணத்தைக் கேட்கவும் தயக்கத்துடன் கூறினேன். அவர்கள் தாங்கள் போலிஸ்காரர்கள் என அடையாளம் காட்டினர். தனியே நள்ளிரவு 12 மணிக்கு என்னைப் பார்த்ததால் சந்தேகம் கொண்டதைக் கூறினர். நான் என்னை பல்கலைக்கழக மாணவன் என அடையாள அட்டையைக் காட்டவும் அவர்கள் மன்னிப்புக் கேட்டனர். நானும் அவர்களை போதைப்பித்தர்கள் எனத் தவறாக எண்ணியதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன். 

இப்போதும் அவ்விடத்தைக் கடக்கும்போது அந்த நினைவு வரும். இப்படி பி.பி.என் விடுதியில் தங்கி பயின்ற நூற்றுக்கணக்கணக்கான மாணவர்களுக்கும் ஆடம்பர அடுக்குமாடியாவிட்ட அந்த நிலத்தில் எத்தனை நினைவுகள் இருக்கும் என யோசித்துக்கொள்வேன். நம் அடையாளங்கள் எல்லாம் நினைவுகளாக மட்டுமே தடயங்களாக எஞ்சுவதாகத் தோன்றும்.

ஒளிர் நிழல் 42: நேர்மறை ஒளி

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை 1982 வரை லெம்பா பந்தாயில்தான் செயல்பட்டது. இதே பகுதியில்தான் லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வந்தது. ஒரு வாரத்தில் 20 மணி நேர வகுப்பு 4 மணி நேர சிறப்பு வகுப்பு என இருபத்து நான்கு மணி நேரம் மட்டும்தான் எங்களுக்குப் படிப்பு.

முதலாம் ஆண்டு நான் விவேகாநந்தர் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தேன். மற்ற மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த மாணவர்களுக்கான விடுதியில் தங்கி படித்தனர்.

சில மாதங்களிலேயே பல்கலைகழக கல்வி என்பது பள்ளி வாழ்க்கையைப் போல ஏட்டுக்கல்வியைச் சார்ந்ததல்ல என உணர்ந்துகொண்டேன். அத்தனையையும் ஆசிரியர்களே தயாரித்து ஊட்டிவிட மாட்டார்கள்… ஒவ்வொன்றுக்கும் கட்டளையிட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்… நாமாக இயங்க வேண்டும் இல்லாவிட்டால் காணாமல் போய்விடுவோம் எனப்புரிந்தது. குறிப்பாக பிற இன மாணவர்களுடன் இணைந்து அறிவியல்துறை சார்ந்த புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் அவசியம் உணர்ந்தேன்.

Read More »

வலிமையற்ற சமூகமும் வன்பகடியும்

இப்போது நடைமுறையில் இருப்பதுபோலவே 70களிலும் பல்கலைக்கழகம் செல்ல மருத்துவ அறிக்கை அவசியமானது. 

லெபோ அம்பாங் சாலையில் அமைந்திருந்த கணேசன் கிளினிக்கில்தான் இலவச மருத்துவ பரிசோதனை பெற்றேன். அந்தக் காலக்கட்டத்தில் முழுமையான மருத்துவ சோதனைக்கு 60 முதல் 100 ரிங்கிட் வரை செலுத்த வேண்டும். அப்போது அது பெரிய தொகைதான். 

Read More »

ஒளிர் நிழல் 40: புதிய தொடக்கம்  

ஐ.சி.ஐ நிறுவனத்தின் வேலை நிறுத்த கடிதம்

இந்தத் தொடரின் 39ஆவது பாகம் எழுதி நான்கு மாதங்களுக்குப்பின் 40ஆவது பாகம் எழுதுகிறேன். இத்தளத்தினை நிர்வகிக்கும் நவீன் அடுத்த பாகம் குறித்து கேட்கும்போதெல்லாம் அதனை எழுதுவதற்கான மனநிலை உருவாகாமல் இருந்தேன். மை ஸ்கில்ஸ் அறவாரியம் கடுமையான உழைப்பை கோரும் அமைப்பு. என் வாழ்நாளின் நான் எடுத்துக்கொண்ட முதன்மையான பணி அதை சுணக்கம் இன்றி நடத்துவது. அக்கல்லூரியை நம்பி பல ஏழை மாணவர்கள் உள்ளனர். எனவே பிற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டே எடுத்துக்கொண்ட பணிகளை முழுமை செய்ய வேண்டியதாகி போனது.  எப்படியிருப்பினும் இனி இடைவெளி இன்றி இந்தப் பாகத்தை தொடர்வதென்றே முடிவு செய்துள்ளேன். 

Read More »