ஒளிர் நிழல் 51: தீதும் நன்றும்

நான் ஒரு சமயவாதியல்ல. ஆனால் இவ்வலகத்தை ஆன்மிக சக்தி ஒன்று நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பதில் அசையா நம்பிக்கைக் கொண்டவன். சமயம் சடங்குகளைக் கடந்து அன்பு என்ற  பிரபஞ்ச சக்தி மொத்த உயிர்களையும் சமன்பாட்டோடு இயங்க வைக்கிறது என்பதில் உறுதிபாடு உடையவன். என் தேவைதான் என் முன்னேற்றம் என வாழ்வை சுருக்கிக்கொள்ளாமல் நமது தேவை சமுதாய முன்னேற்றத்துக்கானது எனும் நோக்கத்தில் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலுக்கும் யார் உடனிருக்க மறுத்தாலும்  பிரபஞ்சம் இணை நிற்கும் என்ற நம்பிக்கை ஆரம்ப காலம் தொட்டே என்னுள் விதையாக விழுந்து விருட்சமாகியிருந்தது. 

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறுதியாண்டின் இரண்டாம் தவணை கடைசி தேர்வு பிற்பகம் 12 மணிக்கு முடிந்தது. நான் ஏற்கனவே தேர்ச்சி பெறாத தேர்வு தாளை எழுதும் முன்பு என் நண்பன் அந்தோணி சார்லஸை (Anthony Charles) தேர்வு மண்டபத்தில் சந்தித்தேன். அவருடன் உரையாடிக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.

“பசு, தேர்வு முடிந்துவிட்டது. இனி ஒரு நல்ல வேலை, வசதியான கார், பெரிய வீடு என வாழ்க்கை செட்டலாகிவிடும்” என அந்தோணி கூறினார். 

நான், “இல்லை, நான் எனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கப் போகின்றேன். லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலப் போகிறேன்” என அவரிடம் கூறினேன். 

ஒரு பொறியியலாளராகப் பட்டம் பெற்ற பிறகு நல்ல வேலை, சம்பளம், மனைவி, பிள்ளைகள் என எளிய உலகியல் வாழ்வை ஏற்க என் மனம் தயங்கியது. ஒரு வழக்கறிஞராக மாறி சமுதாயத்திற்கு நன்மை செய்யும் மனிதனாக திகழ் வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருந்து என்னை இயக்கியது. 

அந்தோணி சார்லஸ் என் நெருங்கிய நண்பர். மலாக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். நான்கு ஆண்டுகள் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஒன்றாக ஒரே துறையில் பயின்றதில் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகியிருந்தோம். அந்தோணி சார்ல்ஸ் மிகவும் கெட்டிக்கார மாணவர்.

ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம். ஒரு வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலும் என் பதிலும் ஒன்றுபோலவே அமைந்துள்ளதைக் கண்ட விரிவுரையாளர் ‘அதெப்படி பதில்கள் 100 சதவிகிதம்  ஒன்றுபோலவே இருப்பது சாத்தியம்?’ என எங்கள் இருவர் தாளிலும் கேள்வி எழுப்பியிருந்தார். காப்பியடிப்பதற்கும் தனித்திறன் வேண்டுமென்று அன்றுதான் முடிவெடுத்தேன். உண்மையில் அவை அந்தோணி சார்லஸின் பதில்கள். அவரே கேட்கப்படும் கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுபவராய் இருந்தார். அதற்குப் பிறகு நான் அவரிடம் பதில்களை விவாதித்து என் பாணியில் எழுதப்பழகிக்கொண்டேன். 

நல்ல நண்பர்கள் அமைவது ஒரு வரம். அந்தோணி சார்லஸ் நான் முன்னெடுக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் அவர் உறுதுணையாக இருந்தார். நன்றாக கிட்டார் வாசிக்கக் கூடியவர் அவர். ஆங்கிலப் பாடல்களுக்கு அற்புதமாக நடனம் ஆடுவார். மைக்கல் ஜாக்சனின் Billie Jean பாடலுக்கு அவரைப்போலவே Moon walk செய்து நடனம் ஆடுவதை நான் வியந்து ரசித்ததுண்டு. அதுபோலவே Steve Miller Band இன் Abracadabra பாடலுக்கு அவரைப்போலவே நடனம் ஆடுவதைக் கண்டு வியந்ததும் உண்டு. என்னைப் போலவே சக நண்பர்கள் அனைவருக்கும் அவரது நடனத்திறன் மேல் ஈர்ப்பு இருந்தது. 

வழக்கறிஞராகும் என் ஆர்வத்தை சொன்னபோது அந்தோணி சார்லஸ் மிகுந்த ஊக்குவிப்பு கொடுத்தார். “உன்னால் பொதுமக்களைக் கவரும் வகையில் பேச முடிகிறது. சிறந்த பேச்சாற்றல் உன்னிடம் உள்ளது. எனவே நீ நிச்சயம் வெற்றிகரமான வழக்கறிஞராக வர முடியும்” என்ற அவரது சொற்கள் என்னைப் பெறும் ஊக்கப்படுத்தின. 

எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்ட  பூமிபுத்ரா வங்கியில் லண்டன் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான பேங்க் ட்ராஃப் ஒன்றை எடுத்தேன். அது இணைய வசதிகள் இல்லாத அமைதியான காலக்கட்டம். கடிதமே எல்லா தொடர்புகளுக்கும் ஏற்ற ஊடகமாக இருந்தது. 

எனவே லண்டன் பல்கலைக்கழகத்தில் பயில கடிதம் வாயிலாக மனு செய்தேன். என் நம்பிக்கையையும் சுமந்துகொண்டு அக்கடிதம் தபால் பெட்டியில் விழுந்தது.

இறுதி தவணை கடைசி தேர்வுக்குப் பிறகு நாங்கள் அனைவரும்  புறப்படும்  நேரம் வந்தது. அந்த வெளியேற்றம் அவரவர் எதிர்காலம் நோக்கியதாக இருந்தது. நான் ஒரு மினிமலிஸ்ட். எனக்குத் தேவையான பொருட்களை மட்டுமே உடன் வைத்திருப்பேன். எனவே என் உடமைகள் அனைத்தும் ஒரு பெட்டியில் அடங்கியது. இன்னொரு பெட்டியில் இறுதியாண்டு பாடப்புத்தகங்கள், சில குறிப்பு நூல்கள், நண்பர்கள் கொடுத்த அன்பளிப்புகள் என அடுக்கி வைத்தேன். 

நான் இந்த நான்கு ஆண்டுகளில் என்ன கற்றேன் என எனக்குள் வினவிக்கொண்டே இருந்தேன். என் ஆரம்பப்பள்ளியில் 100% இந்திய மாணவர்கள். இடைநிலைப்பள்ளியில் 95% சீன மாணவர்கள்.

மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் 90% மலாய் மாணவர்கள் 99% மலாய் விரிவுரையாளர்களும் இருந்தனர். மலாய் தேசியமும் இஸ்லாமிய சமயமும் சூழ்ந்திருந்த வளாகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகம் கற்றுக்கொண்டதாகவே கருதினேன். 

ஒருவகையில் ஆரம்பப்பள்ளி முதலே என் கல்வி வாழ்க்கை பலவகையில் அர்த்தபூர்வமானது எனத் தோன்றியது.

இனம், சமயம், மதம் எனும் பிரிவினைகளை உருவாக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து மனிதன், மனிதாபிமானம் எனும் அடிப்படையில் அனைவர் மீது அன்பு செலுத்தவும் மதிப்பளிக்கவும் எல்லா காலக்கட்டம் போலவே பல்கலைகழக வாழ்க்கையும் எனக்கு போதித்திருந்தது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா எனக் கூறியதை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். நமக்கு நடக்கும் நன்மை தீமைகள் பிறரால் நிகழ்வதில்லை; நாமே அதற்கு காரணம் என அவர் அறிவுருத்திச் சென்றது என் வாழ்வின் அனுபவமாகச் சான்று கூறின.

One thought on “ஒளிர் நிழல் 51: தீதும் நன்றும்

  1. உங்களின் பதிவு… தீதும் நன்றும் அருமை! அருமை! அருமை!!!

    உங்களின் பதிவை படிக்கும் போது, தெள்ளத் தெளிவாக தெரிகிறது ; மனிதனின் சூழ்நிலையோ அல்லது அவனின் செல்வாக்கோ அவனை உருவாக்கவில்லை; எல்லாவற்றிற்கும் மேலான இறைவன் கொடுத்த சிந்தனை வளமே, அவனை விழுதுப் போல் பலப் படுத்தி, ஆழ வேரூன்றி தன்னிச்சையாக செயல்பட… தெளிந்த உணர்வையும்…ஆக்க கரத்தையும் கொடுக்கிறது என்பதனை தங்களின் அன்றாட வாழ்வின் வெற்றிக்கு ரகசியம் என்று நன்கு தெளிவாக புரிகிறது.
    “சேற்றில் வளரும் செந்தாமரை.”
    செந்தாமரை சேற்றில் இருந்தாலும் அது தன் வளர்ச்சியில் சூரியனை பார்த்துக் கொண்டே கம்பீரமாக வளர்ந்து விடும்! அவ்வாறு தான் தாங்களும் சகல சூழ்நிலைகளிலும் கடந்து வந்து தங்களை உயர்த்தி,வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் மனிதன்!

    தாங்கள் சமுதாயத்திற்கு என்று கூறியதை விட ; ஆத்மீகமாக மனித குலத்தின் மீது தாங்கள் வைத்திருக்கும் தெய்வீக அன்பு என்று கூறினால் மிகை ஆகாது!!!

    “அன்பு சகல பாவத்தையும் மூடும்.” இது ஒரு தெய்வீக வார்த்தை அவ்வாறுதான் பல வகையில் சிக்குண்டவர்களுக்கு தெளிந்த நீரோடையாக, கள்ள கபடமற்று, பச்சபாதம் பார்க்காமல் சரியான நோக்கத்தோடு , செய்தே முடிப்பேன் என்று!!!! வைராக்கியத்தோடு உங்களைப்போல் ஆற்றலும், உண்மைத்துவமும் உள்ள ஆன்மீக உணர்வு உள்ள மனிதர்கள் மிக மிக அரிது இவ்வையகத்தில்.

    இது ஒரு மாபெரும் வரம் தான், நல்லதொரு நண்பர்கள் அமைவதற்கு!!!
    நம் நோக்கங்கள், நம் செயல்கள் உண்மைத்துவமாக இருக்கும்போது ; நம் பரம பிதாவே (universe). நம் தேவைகளுக்கு அவரே உக்கிராணக்காரன் ஆக (steward )இருக்கிறார்.

    ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிமிஷமும் ; காலம் என்ற ரூபத்திலும், சூழ் நிலைகள் என்ற ரூபத்திலும் இறைவன் அன்றாடம் நல்லதொரு ஆசாரியனாக நமக்கு சகலத்தையும், போதித்த வண்ணமே இருக்கிறார்!
    உணர்வு உள்ளவர்களாக இருப்போம் ஆயின் பரம பிதாவின் இதயத்துடிப்பை உணர்ந்துக் கொள்ளலாம்!!!

    வாழ்க வளமுடன்!
    நீண்ட ஆயுளுடன்!
    உங்கள் இதயத்தின் விருப்பங்களை இறைவன் சந்திப்பாராக!!!

    அன்புடன்
    புனிதா அன்பழகன்

    Like

Leave a comment