ஒளிர்நிழல் 52: முதல் நேர்காணல்

இறுதி ஆண்டு பல்கலைகழக கல்வியை முடித்த நான் பாங்கியில் இருந்து மீண்டும் கோலாலம்பூரை வந்தடைந்தேன். அப்போது பெண்கள் சாரணியர் இயக்கத்திற்கு மறைந்த டத்தீன் ஆதி.நாகப்பன் பொறுப்பாளராக இருந்தார். நான் அவருக்கு அவ்வப்போது சில உதவிகளைச் செய்து வந்ததால் எனக்கு நிரந்தரமாக தங்கும் இடம் கிடைக்கும் வரை அவ்வியக்க மண்டபத்தை ஒட்டி இருந்த அறையில் தங்க அனுமதித்தார். 

வார இறுதி நாட்களில் அந்த மண்டபம் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகை விடப்படும். அப்படி எந்த விருந்து நடந்தாலும் அன்று எனக்கும் விருந்து என்றே அர்த்தம். எந்த அழைப்பும் இன்றி நான் விருந்தில் கலந்துகொண்டு உணவருந்துவதை யாரும் தடை செய்ததில்லை.

80களின் தொடக்கத்தில் புதிய பட்டதாரிகள் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றுவது வழமையாக இருந்தது.  அங்கு மூன்றாண்டுகள் வேலை செய்த அனுபவத்தோடு வேறு அனைத்துலக நிறுவனத்தில் நுழைந்தால் சம்பளம் இரட்டிப்பாகும். 

எனக்கு தொழிற்சாலையில் வேலை செய்வதில் நாட்டம் இருக்கவில்லை. அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்ற மாணவன் என்பதால் எனக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது. 

1983ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலைக்கான சூழல்கள் தென்பட்டன. அரசாங்க பணிக்கான வேலை வாய்ப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் முந்தைய மூன்று ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்ட Operasi Isi Penuh எனும் அரசின் திட்டமும் கைவிடப்பட்டது. இத்திட்டமானது பொதுச்சேவை உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களுக்கு  அரசாங்க இலாக்காவில் பணிபுரிய சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது.  

அரசாங்க ஊழியராக வேலை செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்ததால் நான் மனம் தளரவில்லை. அரசாங்க பொதுச்சேவை அலுவலகத்தில் Operasi Isi Penuh பகுதி ராஜா லாவுட் சாலையில் அமைந்திருந்த பி.கெ.என்.எஸ் கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் இயங்கி வந்தது. அங்கு குமஸ்தாவாக பணிபுரிந்த ரமணி என்பவரை நான் அடிக்கடி சென்று அரசு வேலை வாய்ப்புகள் குறித்து கேட்டறிவேன்.

இதற்கிடையே தற்காலிகமாக ஏதும் வேலை செய்யலாம் என எண்ணி கோலாலம்பூரில் திறமையான வழக்கறிஞராக இருந்த திரு. ஹரிராம் அவர்களைச் சந்தித்தேன். வழக்கறிஞர் ஹரிராம் அவர்களை நான் விவேகானந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது அறிவேன். அவர் சத்திய சாய்பாபா பக்தர். அந்த இயக்கத்தில் துடிப்புடன் செயலாற்றினார். நானும் அவ்வியக்கத்தில் இணைந்ததால் எங்களுக்குள் நன்கு அறிமுகம் இருந்தது. 

வழக்கறிஞர் ஹரிராம்,  நண்பர் தனபாலசிங்கம் மற்றும் நான் சத்திய சாய்பாபாவின் மக்கள் சேவை பகுதியில் தீவிரமாகப் பணியாற்றினோம். கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் ஏழ்மையான மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தோம். 

நான் பல்கலைக்கழக படிப்பை முடித்ததை அறிந்த ஹரிராம் என்னை வாழ்த்தி மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். உணவுண்ணும் வேலையில் எனது தற்காலிக வேலையின் தேவையை அவரிடம் கூறினேன். நாட்டின் பொருளாதார சூழலால் வழக்கறிஞர் தொழிலும் பாதிக்கப்பட்டதை கூறிய அவர் நான் ஏன் இரவு நேர பாதுகாவலர் வேலை செய்யக்கூடாது என வினவினார். இரவு நேர பாதுகாவலாக இருப்பதால் பகல் நேரத்தில் வேலைக்கு மனு செய்வதும் நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொள்வதுன் சுலபமாக இருக்கும் என்பது அவர் ஆலோசனை.

அவரது அந்த ஆலோசனை எனக்கு பல்வேறு கேள்விகளை உருவாக்கியது. அச்சொற்களின் உள்ளர்த்தம் எனக்குப் பிடிபடவில்லை. பலகலைக்கழக பட்டதாரியான நான் சாதாரண பாதுகாலவர் பணியைச் செய்யும் அளவில் என் மனநிலை இருக்கிறதா எனக்கண்டறிய அப்படிச் சொல்கிறாரா என எனக்குள் கேட்டுக்கொண்டேன். நான் எந்த வேலையும் செய்யத் தயாராகவே இருந்தேன்.

இந்தச் சந்திப்பு 1983இல் மே மாதம் நடந்த சந்திப்பு. திரு. ஹரிராம் தன் வாடிக்கையாளர்களில் ஒருவரான லால் சிங் என்பரை தொலைப்பேசியில் அழைத்தார். நான் அவரைச் சென்று சந்திக்க ஒப்புதல் வாங்கினார். சீக்கியரான லால் சிங்  ஒரு பாதுகாவலர் நிறுவனத்தை நடத்தி வந்தார். வேலை மனுபாரத்தை பூர்த்தி செய்த பிறகு எனக்கு பாதுகாவலருக்கான மூன்று சீருடைகளைக் கொடுத்தார் லால் சிங். 

பாதுகாவலராக என் பணி தொடங்கியது. 

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு கட்டட வளாகத்தில் நான் பாதுகாவலராக அமர்த்தப்பட்டேன். வேலை நேரம் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை. நான் பாதுகாவலார இருந்த கட்டடத்தின் எதிர்புறம் கல்லூரி ஒன்று இருந்தது. காலையில் அங்கு பயிலும் மாணவர்களைப் பார்க்கும் போது எனது மாணவர் பருவம் நினைவுக்கு வரும். நான் கடந்து வந்த பாதைகளை நினைத்துக்கொள்வேன். எனக்கான வளமான எதிர்காலம் உண்டென எனக்குள் சொல்லிக்கொள்வேன். 

ராமசுப்பையா அறவாரியத்தின் வழி எனக்கு உதவி கிடைக்க துணைபுரிந்த நல்லுள்ளங்கள் சிலரை நான் அவ்வப்போது சென்று சந்தித்து வந்தேன். திரு.காளிமுத்து, டாக்டர் அம்பிகை பாகன், ஆர்.டி.எம் மணியம், திரு.வீ.செல்வராஜ், திரு.செல்வா, திரு.நவமுகுந்தன் போன்றோரை சந்திப்பது என் வாழ்வை எதை நோக்கி செலுத்த வேண்டும் எனும் தூர நோக்கு எழுந்தது. 

அப்படித்தான் ஜூலை மாதம் நவமுகுந்தன் அவர்களை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சந்தித்தேன். அந்த அலுவலகம் தோட்ட மாளிகையில் செயல்பட்டது. அவரிடம் என் இரவு நேர வேலையைக் கூறியபோது அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். “உன் முயற்சிகள் மற்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்” எனக் கூறி அந்த பத்திரிகையின் நிருபரை அழைத்து என்னை நேர்காணல் செய்யச் சொன்னார். அந்த நேர்காணல் சங்கமணி நாளிதழின் இரண்டாம் பக்கத்தில்  8.7.1983இல் இடம்பெற்றது. 

நான் அந்த நேர்காணலில் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் இவை, ‘ஒவ்வொருவரும் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால்தான் அது வாழ்க்கையின் முன்னேற்றம் என எண்ணிவிடக்கூடாது. தொழில் நுணுக்கப் பயிற்சிபெற்று தொழிற்சாலையில் இயந்திரங்களைப் பழுது பார்ப்பதும் இயக்குதும் கூட ஒருவகையான முன்னேற்றம். எனவே பல்கலைக்கழகத்தில் நுழைய முடியாதவர்கள் தொழிற்பயிற்சி கூடங்களில் இணைந்து பயில வேண்டும். தங்கள் தொழில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என  40 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருக்கிறேன்.

அந்த எண்ணத்தின் வெளிபாடுதான் இன்றைக்கு மை ஸ்கில்ஸ் அறவாரியமோ எனத் தோன்றுகிறது. பிரபஞ்சத்திடம் நாம் உண்மையாக நம்பி வெளிபடுத்தும் சொற்களின் ஆற்றல் அது.

Leave a comment