ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும்

நான் என் வாழ்க்கை குறித்து எழுதிவரும் இந்தத் தொடரை ஆரம்பக்கால கல்வி, இடைநிலைக்கல்வி, பல்கலைக்கழக வாழ்க்கை என 1964 – 1984 வரை முதல் பகுதியாகப் பிரிக்கலாம்.

இரண்டாவது பகுதியாக 1984 – 1994 வரை நான் வேலை செய்த அரசாங்க பணி குறித்தும் அப்பணியில் அமர்வதற்கு முன்னர் செய்த பிற தொழில்களையும் அதில் இருந்த சவால்கள் குறித்து எழுதியுள்ளேன். மேலும் அரசாங்கப் பணியைத் துறந்து நான் வழக்கறிஞராக முயன்ற போராட்ட காலக்கட்டத்தையும் இப்பகுதியில் எழுதியுள்ளேன்.

1994 வரை நான் இந்தச் சமூகத்திடம் அதிகமாகப் பெறுபவனாகவே இருந்துள்ளேன். இன்று யோசிக்கும்போது பிரபஞ்சம் தனது தேவைக்காக என்னைத் தயார்ப்படுத்தவே சில மனிதர்கள் மூலம் பெரிய பெரிய உதவிகளை வழங்கியுள்ளதோ எனத் தோன்றுகிறது.

நான் என் தொழில்சார்ந்த சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் அது என்னுடைய உச்ச பட்சமான ஆற்றல் அல்ல என எனக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. சக்தி மிக்க மந்திரக்கோள் ஒன்று அன்னதான சத்திரத்தில்  ஊதுகோளாகப் பயன்படும்போது உண்டாகும் போதாமை எனக்குள் தேங்கிக் கிடந்தது. அன்னதானம் செய்வதும் சேவைதான். ஆனால் மந்திரக்கோளின் மகத்துவம் என்பது கட்டற்றது அல்லவா?

பிரபஞ்சம் விசித்திரமானது. மிக நுட்பமான கணித சூத்திரங்களை தனக்குள் பொதித்து வைத்துள்ளது. எப்படி ஓர் ஆல மரத்தின் சின்னஞ்சிறிய விதை முட்டிக்கொண்டு வெளிவரும்வரை மண் மூடி இருளுக்குள் காத்திருக்கிறதோ அப்படியே என்னையும் சுவர்களுக்கு மத்தியில் காக்க வைத்தது.

1995 ஆம் ஆண்டு என் வாழ்வில் பெரிய மாற்றம் ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்வின் மூன்றாவது காலக்கட்டம். அது என் முப்பத்து எட்டாவது வயது. அப்போதுதான் நான் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். சமகால சரித்திரப் பின்னணியும் பெரும் அரசியல் தலைவர்களும் தமிழீழத்திற்காகப் போராடிய போரளிகளின் வாழ்க்கை குறிப்புகளும் இனி வரக்கூடிய பகுதிகளில் நீங்கள் வாசிக்கலாம். கொள்கைகளால் நான் செதுக்கப்பட்ட காலமும் சவாலான வாழ்க்கைப் பயணமும் என்னை ஆட்கொண்ட காலமும் இதுதான். நான் இந்தக் காலத்தைத் திட்டமிடவில்லை. நமது வாழ்க்கையில் மகத்தான மாற்றங்கள் எதுவும் திட்டமிடாமல்தான் நிகழ்கின்றன. காரணம் அவை நாம் அறியாத பிரபஞ்சத்தின் கரங்களைக் கொண்டு நகர்த்தப்படுகின்றன.

அது ஜூலை 1995 ஆம் ஆண்டு. எனது நெருங்கிய நண்பர்களான வழக்கறிஞர் கந்தா, வழக்கறிஞர் பழனி, வரதராஜு ஆகியோர் என்னைச் சந்தித்தனர். கந்தா ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பழனி கோலாலம்பூர் மாநகர மன்றத்தில் சட்டப்பிரிவு உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்தார். தோழர் வரதராஜு அரசு சாரா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர். இம்மூவரும் என் சட்ட அலுவலகத்திற்கு வந்தனர். அச்சயம் நான் இலவச சட்ட உதவிப் பிரிவில் முன்னணி வழக்கறிஞராக இருந்தேன்.

அவர்கள் என்னிடம் வரும் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு எனது அலுவலச் சந்திப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டனர். அக்காலக்கட்டத்தில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் சனிக்கிழமை மதியம் வரை பணியாற்றுவது வழக்கம். நான் மதியம் மூன்றுவரை அலுவலத்தில் பணி செய்துக்கொண்டிருப்பேன்.

“என்ன சந்திப்பு?” எனக்கேட்டபோது இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்தச் சந்திப்பு என பதில் வந்தது. நான் அதில் அதிகம் அக்கறைக் காட்டவில்லை. அக்காலக்கட்டத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் போர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற குறுகிய புரிதல் மட்டுமே எனக்கு இருந்தது.

நான் லண்டனின் சட்டம் பயின்ற போது 80-90 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பல தமிழர்களை நான் சந்தித்ததுண்டு. ஆனால் அவர்களில் யாரும் போர் பின்னணி குறித்தோ தங்கள் இன உரிமை குறித்தோ என்னிடம் பேசியிருக்கவில்லை. நானும் அவர்களிடம் கேட்டு அறிய அதிக அக்கறையும் காட்டவில்லை.

இரண்டாவது வாரமும் கந்தா, பழனி, வரதராஜு ஆகியோர் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் கூடினார்கள். நான் அதிலும் கலந்துகொள்ளவில்லை.

மூன்றாவது வாரம் நடைபெற்ற கூட்டத்திற்கு கந்தா வரவில்லை. பழனியும் வரதராஜு ஆகியோர் மட்டுமே இருந்தனர். மூன்றாவது வாரம்தான் எனக்கு அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என அறியும் ஆவல் வந்தது. நான் அதில் இணைந்துகொள்ள அனுமதி கேட்டபோது அவர்கள் சம்மதித்தனர்.

அதுதான் என் வாழ்வில் மாற்றம் நிகழும் நாள் என நான் அறியவில்லை. இலங்கை, தமிழீழம், தமிழர், சிங்களவர், இஸ்லாமியத் தமிழர்கள் குறித்து நிறையக் கேள்விகளைத் தொடுத்தேன். எங்கள் சந்திப்பு மதியம் நான்கு மணிக்கு முடிந்தது.

இக்கூட்டம் நிறைவடைந்தவுடன் என் மனம் மிகவும் கனமாகியிருந்தது. நெல்சன் மண்டேலாவை விடுவிக்க மூன்று முறை லண்டனின் நடந்த வீதி ஆர்பாட்டத்தில் நான் பங்கெடுத்திருக்கிறேன். நான் படித்த பல்கலைக்கழகம் லண்டன் நகரத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு பேருந்தில் ஆறு மணி நேரம் பயணம் செய்து தென்னாப்பிரிக்க சிறையில் இருந்து நெல்சன் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டேன். என் பல்கலைக்கழகத்திலும் தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன்.

ஆனால் மலேசியாவில் இருந்து மூன்று மணி நேரத்தில் விமானம் மூலம் அடையக்கூடிய இலங்கையில் என சக தமிழர்கள் படும் துன்பங்களை நான் கவனிக்காமல் இருந்ததை எண்ணி நான் தலைக்குனிந்தேன்.

One thought on “ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும்

  1. வழக்கறிஞர் பசுபதி ஐயா அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொண்டது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், வல்லினம் என்ற இலக்கியக் குழுவினரின் நிகழ்ச்சிகள் வழியாக ஐயா பசுபதி, மருத்துவர் சண்முகசிவா மற்றும் சிலரையும் ம. நவீன் மூலம் தெரிந்து கொண்டேன். நல்ல எண்ணங்களையும், செயல்திட்டங்களையும் சைம்மையாக வழிநடத்தி வரும் இந்த சிறந்த தமிழ் நெஞ்சங்களின் உன்னத, செயல்பீடுகளை அறிந்து மனதார வாழ்த்தியும், பெருமிதமும் கொள்கிறேன். இவரைப் பற்றிய இந்த படைப்பின் தொடக்கத்திலேநே, எனக்கு மிக ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. மேலும் வாசித்து, அவர்கள் கடந்து வந்த தடயங்களை ஆய்ந்து வழிகொள்ள விழைகிறேன். நன்றி

    Like

Leave a comment