JOY : நன்றிக்கடன் எனும் ஆன்மிக அனுபவம்

மருத்துவர் கண்ணன் பாசமாணிக்கம் என் நண்பர். ஜொகூர் மூவாரில் பிறந்து வளர்ந்த இவர் அங்கேயே இடைநிலைப்பள்ளிவரைப் பயின்றார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று கிள்ளான் பள்ளத்தாக்கில் பிரபலமான இருதய மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார். 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் மை ஸ்கில்ஸ் வந்திருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களைப் பார்த்து பேசி நெகிழ்ந்தவர் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென எண்ணம் கொண்டிருந்தார். 

அது ஓர் அசாதாரண வருகைதான்.

Multiple myeloma எனும் எலும்பு மச்சை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவத்தால் முழுமையாகத் தேறிய நிலையிலேயே அவர் வருகை நிகழ்ந்திருந்தது. அது ஒருவகையில் அவருக்கான மறுபிறவி என்பதால் புத்தெழுச்சியும் வாழ்க்கை குறித்த புதிய பார்வையும் அவர் எண்ணத்தில் பிரதிபலித்தது. புற்றுநோய் எனும் கொடிய அனுபவத்தைக் கடந்து வந்த பின்னர் அவரிடம் எஞ்சி இருந்த உணர்ச்சியில் நன்றி பெருக்கு மட்டுமே அதிகமாக இருந்தது. அந்த உணர்வில் உள்ள ஆன்மிக சாரத்தை நான் அறிவேன். 

கொடிய நோய்களுக்குப் பின்பான மனிதர்களின் வாழ்க்கை முற்றிலும் புதிய பார்வை கொண்டது. அந்தப் பார்வையை மருத்துவர் கண்ணன் பதிவு செய்ய நினைத்தார். தன் வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், கல்விச் சூழல், புற்றுநோயின் கொடுங்காலம், குணமான பின்பான மனநிலை என பல்வேறு அனுபவங்களை கோர்வையாக JOY எனும் தலைப்பில் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார் மருத்துவர் கண்ணன். அந்தத் தலைப்புக்குக் கீழாக ‘சவால்களும் நம்பிக்கையும்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 

அந்த நூலை மை ஸ்கில்ஸ் அறவாரியம் அச்சிட்டு வெளியிட்டது. அதன் அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். 

டாக்டர் கண்ணன்

அச்சடிக்கப்பட்ட 2000 பிரதிகளில் 1500 பிரதிகள் மருத்துவர் கண்ணன் முனைப்பினால் முழுமையாக விற்று முடிந்தன. அறுபது ரிங்கிட்டை அடக்க விலையாகக் கொண்ட இந்நூலின் விற்பனை மூலம் ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் திரட்டி, அத்தொகையை மை ஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு வழங்கினார் மருத்துவர் கண்ணன் பாசமாணிக்கம்.

இந்த நூலில் எனக்குத் தனிப்பட்ட நெருக்கம் உண்டு. அந்த நூலின் 21ஆவது அத்தியாயத்தில் அவர் தன் எட்டு நண்பர்களுடனான அனுபவங்களை கோர்வையாக எழுதியிருந்தார். அந்த எட்டு நண்பர்களில் நானும் ஒருவன்.

நான் என் வாழ்க்கையில் என்னைச் செதுக்கிய இரண்டு நபர்கள் மற்றும் Good Shepherd Convent இல் சேவையாற்றிய கன்னியாஸ்திரிகள் பற்றி அதில் எழுதியிருந்தேன்.

இந்தப் புத்தகத்தை படித்த டெய்லர்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் (Taylor’s College) என்னைத் தொடர்புக்கொண்டனர். அப்பகுதில் நான் குறிப்பிட்டிருந்த Lim Woon Kai குறித்து அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். லிம் கையோடு எனக்கிருந்த நட்புக்கும் மை ஸ்கில்ஸ் அறவாரியம் தோற்றத்திற்கும் உளவியல் ரீதியாகத் தொடர்பு இருந்ததா என அறியவும் அவர்கள் முயன்றனர். 

‘ஒளிர் நிழல்’ எனும் இத்தொடரின் முதல் பாகமே நான் லிம் வுன் கை குறித்து எழுதியே தொடங்கினேன்.

Lim Woon Kai குறித்த முதல் கட்டுரை இணைப்பு

1970 தொடங்கிய அவரது நட்பு குறித்து டெய்லர்ஸ் கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக விசாரிக்கத் தொடங்கினர். என் வறுமையான சூழல் அறிந்து ஒவ்வொரு நாளும் 30 சென் கொடுத்து அவர் எனக்கு உதவியதன் காரணத்தை அறிய முயன்றனர். இடைவிடாத லிம்மின் உதவிக்கான காரணத்தை நாங்கள் இருவருமே அறியாததையும் ஆராயாததையும் நான் அவர்களிடம் கூறினேன். அந்த உதவியை ஏன் எனக்குச் செய்கிறார் எனும்  காரணத்தை நான் கேட்காததையும் அவர் சொல்லாததையும் நினைவு கூர்ந்தேன். இப்போது அவர் ஓய்வு பெற்று பத்து ஆராங்கில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் நான் அவரைச் சந்தித்து என்னால் முடிந்த ஒரு கணிசமான தொகையைக் கொடுக்கிறேன். அது குறித்து அவரும் காரணம் கேட்காததையும் நானும் சொல்லாததையும்  தெரியப்படுத்தினேன். அன்பின் கரங்களில் உள்ள அதிர்வுக்கு முன் சொற்களுக்கு வேலையில்லை அல்லவா!

ஆனால், கொடுப்பதில் உள்ள இன்பத்தையும் பெறுவதில் அடையும் நன்றி உணர்வையும் பதிமூன்றாவது வயதிலேயே எனக்கு அனுபவமாகப் போதித்தவர் என் சீன நண்பர் லிம் வுன் கய் தான்.

முதலில் ஒரு நேர்காணலாக அமைந்த அந்த உரையாடல் பின்னர் இரண்டு நிமிடக் காணொலியாகத் தயாரானது. 

காணொளி இணைப்பு

உதவிக்கு நன்றி கூறுதல் இயல்பானதுதான். ஆனால் நன்றிக்கடன் என்பது செயல்களால் ஆனது. நன்றிக்கடன் என்பதை தெய்வீகத் தன்மை பொருந்திய ஓர் அனுபவம் என்பதை அதை நிகழ்த்திப் பார்க்கும்போது அறிந்துள்ளேன். அந்த அனுபவம் நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. அதன் வழி நாம் பிறருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றோம். கொடுப்பவர்கள் மட்டுமே அறியக்கூடிய ஆற்றல் அது.

என் வாழ்க்கையில் லிம் போல பலரிடம் உதவிகளைப் பெற்றுள்ளேன். நான் கொண்டுள்ள நன்றிக்கடன் அதிகம். அதை வழங்கியவர்களிடம்தான் தீர்க்க வேண்டும் எனும் கட்டாயமெல்லாம் இல்லை. பெற்றதை விட பல மடக்கு அதிகமாக வழங்கும் மனம் சுரக்கும்போது பிரபஞ்சம் அதற்கான சந்தர்ப்பங்களை வாரி வாரி வழங்குகிறது. அதற்காகவே மை ஸ்கில்ஸ் அறவாரியம் தொடங்கப்பட்டதென தோன்றுகிறது. 

JOY எனும் இந்த நூலும் அந்தக் கட்டற்ற ஆற்றலையும் நேர்மறை சிந்தனையையுமே விளக்குகிறது. நீங்கள் இந்நூலை வாசிக்கும் போது அந்த ஆற்றல் உங்களுக்குள்ளும் படரக்கூடும்.

Leave a comment