ஒளிர் நிழல் 53: காலமும் மனமும்

ப. மகேஸ்வரனும் நானும்

நான்  நண்பர் ப. மகேஸ்வரனுடன் பிரிக்ஸ் பில்டில் அவ்வப்போது தேநீர் சந்திப்புகள் நிகழ்த்துவது உண்டு.  சமுதாயம், சினிமா, தோட்டப்புற வாழ்க்கை என பலவற்றையும் ஒட்டி பேசுவோம். 

ப. மகேஸ்வரன் எனக்கு அறிமுகமானது என்னுடன் மலேசிய தேசிய  பல்கலைக்கழகத்தில் பயின்ற சுப்பிரமணியம் மூலமாகத்தான்.   

ப. மகேஸ்வரன் சுவாரசியமான நண்பர்.  இப்போது மலேசிய சத்தியராஜ் என அழைக்கப்பட்டு கலைத்துறையில் மிகவும் பிரபலமாக திகழும் அவர் அப்போது கிரௌன் பசிபிக் என்ற நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். அவரிடம் பேசும்போதெல்லாம் அவரது சகோதரி பாமாவின் திருமண நிச்சயம் நினைவுக்கு வரும் அதை ஒட்டி நான் செய்த பாதுகாவலர் பணியும் நினைவுக்கு எட்டும்.

ஆம். அச்சமயம் நான் ஜாலான் கூச்சாய் லாமாவில் இருந்த கெ.எப்.சியின் அருகாமையில்  கனர இயந்திரம் வைத்திருந்த பகுதிக்கு இரவு நேர காவலனாக பணி புரிந்து கொண்டிருந்தேன். ப. மகேஸ்வரன் குடும்பத்தினர் ஜாலன் கிள்ளான் லாமாவில் உள்ள கம்போங் பினாங் பகுதியில் வசித்து வந்தனர்.

மகேஸ்வரனின் சகோதரி பாமா மணம்புரியவிருந்த ஜெயபாலன் எனக்கு நல்ல நெருக்கமான நண்பர். அவர் அப்போது வானொலியின் தமிழ் பகுதியில் பணியாற்றி வந்தார். மிகவும் மென்மையான குரல் வளம் கொண்டவர். எளிமையானவர். அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை மிகவும் அளந்து பேசக்கூடிய திறமை பெற்றிருந்தார். பாமா – ஜெயபாலனின் திருமண நிச்சயம் ஒரு சனிக்கிழமை அன்று நடந்தது. நான் எனது மேலதிகாரியிடம்  இரவு 7.00 முதல் 8.00 வரை ஒரு நிகழ்வுக்கு செல்லவிருப்பதாகக் கூறி அனுமதி பெற்று,  திருமண நிச்சயத்தில் கலந்து கொண்டேன். 

இப்போது கூட பாமா ஜெயபாலன், மகேஸ்வரன் குடும்பத்தினருடன் எனக்கு நெருங்கிய உறவு இருக்கிறது.  அவர்கள் இன்றும் என்னுடைய நண்பர்களாக இருக்கின்றார்கள். நான் வந்த வாழ்வின் வழித்தடத்தை அறிந்த மிகச்சிலரில் அவர்களும் அடங்குவர்.

நான் பாதுகாவலனாக வேலை செய்துக்கொண்டிருந்த போது ஒரு நாள் காலையில் திரு அம்பிகை பாகனைச் சந்தித்தேன். அவர் “உனக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வரை ஏன் FIT (Federal Institute of Technology) தொழில் நுட்பக்கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிய கூடாது?” என்று கேட்டார். 

அந்த காலகட்டத்தில் விவேகானந்த ஆசிரமத்தின் தலைவராக இருந்தவர் திரு அம்பிகை பாகன் இருந்தார். இப்போதும் அவர்தான் தலைவராக இருக்கின்றார்.  டான் ஸ்ரீ அம்பிகை பாகனாக என அறியப்படுகின்றார். டாக்டர் ராம சுப்பையா உபகாரச் சம்பளத்தில் மாணவர்கள் விவேகானந்த ஆசிரமத்தில் தங்கி பயிலும் வசதி செய்துக்கொடுத்தவர்களில் அவர் முதன்மையானவர். 

 80-ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் தொழில் கல்லூரிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன. ஆனால் தனியார் கல்லூரியான FIT என்பது பிரபலமான ஒரு கல்லூரி.  இது பிரிக்ஸ் பில்டில் இயங்கி வந்தது.

FIT, TTI இந்த இரண்டு நிறுவனத்தையும் வழிநடத்தியவர் இந்தியர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி  பயின்று wiring, mekatronik welding போன்ற துறைகளில் சான்றிதல் பெற்று பிறகு. பிரலமான நிறுவங்களில் வேலைக்கு அமர்ந்தனர்.

1983- ஆம் ஆண்டு இக்கல்லூரி செராஸுக்கு  இடமாற்றம் கண்டது. அப்போது அந்த கல்லூரியின் முதல்வராக திரு. புருசோத்தமன் இருந்தார். அவர் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர். நான் டான் ஸ்ரீ அம்பிகை பாகன் ஆலோசனை படி அவரைச் சந்திக்க செராஸில் உள்ள Taman Taynton View சென்றேன். எனது கல்வி பின்னனியை செவிமடுத்த பிறகு என்னை பகுதி நேர ஆசிரியராக நியமித்தார். 

காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி வரை அங்கு படிக்கும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு நான்காம் ஐந்தாம் படிவ கணிதம் போதிக்க வேண்டும். காலையில் கணித பாட விரிவுரையாலராகவும் மாலையில் பாதுகாவலராகவும் எனது பணி தொடர்ந்தது. 

1983ஆம் ஆண்டு FIT தொழில்திறன் கல்லூரியில் கணித பாட போதகராக பணிபுரியும்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு மை ஸ்கில்ஸ் தொழில்திறன் கல்லூரியை தோற்றுவிக்க முக்கிய காரணியாக இருப்பேன் என எனக்குத் தெரியாது.  

நான் பிறந்து வளர்ந்த பகுதி பத்து ஆராங். அப்பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் தொழிற்திறன் பெற்ற ஆயிரக் கணக்கான இந்தியர்கள் வேலை செய்தனர். எனது தகப்பனார் ஒரு கொதிகலன் நிர்வாகி. அதுவும் ஒரு தொழில்திறன்தான். அந்தத் திறந்தான் அவர் இறக்கும் வரை அவருக்கான பணி வாய்ப்பைக் கொடுத்தது.

ப. மகேஸ்வரனுடன் உரையாடும்போது 1983 ஆம் ஆண்டு FIT என்ற தொழில் துறை கல்லூரியில் நான் விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவத்தை பின்னோக்கி பார்த்து  பாகிரும்போது இந்த பிரபஞ்சமே தொழில் துறை கல்லூரியை நிர்வகிக்ககூடிய மனநிலையை எனக்கு உருவாக்கித்தந்துள்ளது என்ற எண்ணம் நிழல்போல அசைந்தாடுவது உண்டு.

One thought on “ஒளிர் நிழல் 53: காலமும் மனமும்

Leave a comment