ஒளிர் நிழல் 54: சொல் கொல்லும்; சொல் வெல்லும்

அரசு சேவை உபகாரச் சம்பளம் பெற்று பட்டப்படிப்பை முடித்திருந்ததால் எனக்கு அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மேலும் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வேலைக்குச் சென்ற பத்து ஆண்டுகளிலேயே வழக்கறிஞர் துறையில் இரண்டாவது பட்டப்படிப்பைத் தொடர அரசாங்க வேலையே ஏற்றது. எனவே அவ்வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அதே சமயம் தனியார் துறையிலும் வேலைக்கு மனு செய்து நேர்முகத்தேர்வுகளுக்கும் சென்று கொண்டிருந்தேன்.

ஒருமுறை என்னுடன் ஐந்தாம் படிவம் பயின்ற சீன நண்பரை லெபோ அம்பாங்கில் சந்தித்தேன். அவர் ‘ஹாங்காங் சைனா’ வங்கியில் குமஸ்தாவாக வேலை செய்துக்கொண்டிருந்தார். நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டதை அறிந்தவர் அந்த வங்கியில் அதிகாரியாகப் பணிபுரியும் வாய்ப்புள்ளதைத் தெரிவித்தார். அந்த வங்கியின் மனிதவள அதிகாரி ஓர் இந்தியர் என்பதையும் தெரிவித்து எனக்கான வேலை வாய்ப்பு அவர்வழியாக எளிமையாகலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

நானும் ஹாங்காங் வங்கிக்கு வேலை மனு செய்தேன். மூன்று வாரமாக எந்த பதிலும் வராததால் அந்த அதிகாரியைச் சந்திக்க ஒரு சனிக்கிழமை காலை நேராகச் சென்றேன்.

அங்கு அவ்வதிகாரியின் காரியதரிசி என்னைத் தடுத்து நான் வந்த காரணத்தைக் கேட்டார். என் நோக்கம் அந்த அதிகாரியைப் பார்ப்பது. எனவே என் பல்கலைக்கழகம் சார்பாக அவரைச் சந்திக்க என்னை அனுப்பினார்கள் எனும் பொய்யைச் சொன்னேன். ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என வள்ளுவர் போதித்தது தவறாகாது அல்லவா.

அவரைச் சந்தித்த அடுத்த நிமிடமே நான் சொன்ன பொய்க்காக மன்னிப்புக் கேட்டேன். நான் வந்த காரணத்தைத் தெளிவுப்படுத்தினேன்.

அவர் கொஞ்சம் கடுமையான குரலில் நான் பொய் கூறி உள்ளே நுழைந்தது தவறு என்றவர் முன்விண்ணப்பம் இல்லாத என்னைப் பார்க்க விரும்பவில்லை என அதட்டலான குரலில் கூறிவிட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. ‘உன் வேலை மனுவை நான் பரிசீலிக்கிறேன்’ எனச்சொல்லி எனக்கு வேலை கொடுக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனதை புண்படுத்தும்படி அவர் ஆணவமாக நடந்துகொண்டது என்னை கடுமையாகவே பாதித்தது.

அடுத்து என்ன செய்வதென குழம்பிக்கொண்டிருந்த போது விவேகானந்தர் ஆசிரமத்தின் தலைவர் திரு. அம்பிகை பாகன், அவர் நண்பர் ‘அஸ்த்ரா பார்மஸியின்’ உயர் அதிகாரியாக இருக்கும் திரு. வெங்காவைப் பார்க்கச் சொன்னார். எனக்கு மீண்டும் வேலை வாய்ப்புக்காக ஒருவரைச் சென்று சந்திப்பதில் தயக்கம் இருந்தது. ஆனாலும் என்னைத் திடப்படுத்திக்கொண்டு சென்றேன். நானும் அவரைச் சந்தித்தேன். சுமார் ஒரு மணிநேரம் என்னிடம் பேசிய திரு. வெங்கா நான் கடந்து வந்த பாதைகளை அறிந்துகொண்டார். நான் அங்கு வேலை செய்வது என் ஆளுமையை முடக்கும் என அவருக்குத் தோன்றியதால் எனக்கு சில ஆலோசனைகளைச் சொன்னார். “நீ இங்கு வேலை செய்தால் நீ விற்கும் பொருட்களின் நிலைக்கு ஏற்பவே உனக்கு கமிஷன் வழங்கப்படும். பிறகு விற்பனைக்குக் கிடைக்கும் கமிஷனை நோக்கியே உன் வாழ்க்கை நகரும். இதனால் உன் மற்ற ஆளுமைகள் மங்கிவிடும்” என்றவர் நான் அங்கு வேலை செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றார்.

அவர் வேலை கொடுக்காவிட்டாலும் அவர் சொற்கள் எனக்கு என் மீதே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியது. யோசித்துப் பார்த்தால் இரண்டு இடத்திலுமே எனக்கு நிகழ்ந்தது நிராகரிப்புதான். ஆனால் ஒன்று நம்மை அவமதிக்கிறது; மற்றது மேம்படுத்துகிறது.

எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் திரு. அம்பிகை பாகன் ஆர்வம் காட்டினார். அன்றைய துணை மனிதவள அமைச்சராக இருந்த டத்தோ பத்மாவைச் சந்திக்கும் படி ஆலோசனை கூறி அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்தார். நானும் அவரைச் சென்று சந்தித்தேன். எங்கள் சந்திப்பு 5 நிமிடம் நடந்தது. அச்சந்திப்பின் இறுதியில் “பெட்ரோனாஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் உன்னை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தால் என்னை வந்து பார்… உனக்கு சிபாரிசு கடிதம் கொடுக்கிறேன்” என்றார். நானும் நம்பிக்கையுடன் விடைபெற்றேன். அந்த நம்பிக்கையுடன் என் வேலை தேடும் படலத்தைத் தொடர்ந்தேன். ஒவ்வொருவரும் கொடுக்கும் ஊக்க வார்த்தைகள் என்னை மனஞ்சோராமல் செய்தது.

ஜூலை மாதத்தின் நியூஸ் ஸ்ட்ரேட் டைம்ஸ் நாளிதழில் வருமானவரி இலாக்காவில் புதிய அதிகாரிகளை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவிப்புகள் வந்திருந்தது. அங்கு எனக்கு வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது. நான் வேலைக்கு விண்ணப்பித்தேன். நான் Operasi isi penuh clerk திரு.ரம்லி அவர்களைச் சந்தித்து நான் படித்ததைக் கூறினேன். அவரும் அதை உறுதி செய்து 350 அதிகாரிகளை வேலைக்கு எடுக்க விருப்பதைத் தெரிவித்தவர் எனக்கு பொதுசேவை உயரதிகாரியாகப் பணிபுரிந்த திரு. செல்வா சிபாரிசு செய்துள்ளதால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதைக் கூறினார். மீண்டும் சில நேர்மறையான சொற்கள் என்னை உற்சாகப்படுத்தின.

அன்றிலிருந்து நான் பத்து ஆராங்கில் உள்ள என் வீட்டுக்கு அழைத்து ஏதும் கடிதம் வந்துள்ளதா என தம்பியிடம் விசாரிப்பேன். இரண்டு வாரத்தில் வருமானவரி இலாக்காவில் எனக்கு அதிகாரியாக வேலை கிடைத்துள்ள கடிதத்தை தம்பி வாசித்தபோது அகம் மகிழ்ந்தேன். ஆகஸ்டு இரண்டாவது வாரம் வேலைக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பெடுத்துக்கொண்டேன்.

எனக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் அந்த வேலையைக் கொண்டே எனது இரண்டாவது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் திட்டம் நிறைவேறும் எனும் எண்ணமே என்னை அதிகம் உற்சாகப்படுத்தியது. அது வாழ்க்கையில் எனது முக்கிய மைல்கல்.

பாதுகாவலர் வேலைக்கும் தற்காலிக விரிவுரையாளர் வேலைக்கும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு பணி புரிந்த வேலைக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு நன்றி பெருக்குடன் விடைபெற்றேன்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஐந்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் போதித்த மாணவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு மனநிறைவு அடைந்தேன். சில துணை பொறியியலாளர்களாகவும் சிலர் குத்தகையாளர்களாகவும் உயர்ந்திருந்தனர். இவர்கள் யாரும் பட்டதாரிகள் அல்ல. ஐந்நாம் படிவத்தில் சுமாராகத் தேர்ச்சி பெற்று தொழில்திறன் கல்லூரிகளில் மூலம் தங்கள் திறமையையும் ஆளுமையையும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள்.

ஆகஸ்டு 1983 ஆம் ஆண்டு இரண்டாவது வாரம் ஜாலான் டூத்தாவில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் காலை எட்டு மணிக்குக் காலடி எடுத்து வைத்தேன். ஏறக்குறைய 300 புதிய பட்டதாரிகள் என்னுடன் வேலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் என்னைத் தவிர ஒரே ஒரு இந்தியர் இருந்தார். எனக்கு நன்கு அறிமுகமான திரு சந்திரசேகரன் அவர். மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாத்துறை பட்டதாரி. மேலும் ஐந்து சீனர்கள் இருந்தனர். மற்ற அனைவரும் மலாய்க்காரர்கள்.

சிறிய விளக்கங்கள், அறிமுகங்களுக்குப் பின்னர் ஐவர் கொண்ட குழுவாக வெவ்வேறு பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். நான் புளோக் 11இல் இருந்த 11 ஆவது மாடியில் அமைந்திருந்த J குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். எங்கள் மேலதிகாரி திருமதி ஹசிமா தலைமையில் பணிகள் தொடங்கின.

One thought on “ஒளிர் நிழல் 54: சொல் கொல்லும்; சொல் வெல்லும்

  1. உச்சரிக்கும் சொற்கள் மந்திரமாம். ஆகவே பேசும்போது கவனம் என்று எனது சக நண்பர் சதா சொல்வார். நேர்மறைச் சொற்கள் புதிய நம்பிக்கையை உற்சாகத்தை எழுப்பும். எதிர்மறைகள் உள்ளத்தை உசுப்பி குழுக்கி கிள்ளி கிளர்ந்தெழும்ப வைக்கும். இரண்டுமே தேவைதான்.

    Like

Leave a comment